பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 4.25

அவ்வாறானால் கேலன் கூறியது என்ன? 'இதயத்தின் இடது பக்கத்திற்கு ரத்தம் வந்து, அங்குதான் அது காற்றுடன் கலந்து உயிர்ச் சக்தி பெறுகிறது” என்பதுதான். எனவே, செர்விட்டஸ் நுரையீரல்: என்ற பகுதியைப் பற்றி எவ்விதக் கருத்தும் கூறவில்லை என்பதுதான் இங்குச் சிந்திக்கத் தக்கது.

இருந்தும், கேலனுக்கு எதிராக செர்விட்டஸ் ஒரு கருத்தைக் கூறிவிட்டார் என்பதற்காக, அவர்மீது மற்ற ஆய்வாளர்கள் தீராக் கோபம் கொண்டார்கள்.

அதனால், கி.பி. 1553-ஆம் ஆண்டில், அக்டோபர் மாதத்தில் செர்விட்டஸ் என்ற அந்த விஞ்ஞான மதகுரு ஆய்வாளாரை கேலன் நம்பிக்கையாளர்கள் உயிரோடு எரித்துச் சாம்பலாக்கி விட்டார்கள். எரித்தது மட்டுமன்று, அந்தப் பாதிரி தனது இதய ஆராய்ச்சியைப் பற்றி எழுதி வைத்திருந்த குறிப்புக்களை எல்லாம் தீ வைத்து எரித்துச் சாம்பலாக்கி விட்டார்கள்.

கருத்து கூறியதற்காக செர்விட்டசை நெருப்பிலிட்டு உயிரோடு கொளுத்திச் சாம்பலாக்கலாமா? என்ற கேள்வியைத் தற்கால மாணவர்களாகிய நீங்களும் கேட்கத்தான் தோன்றும். அதற்கு காரணம் என்ன தெரியுமா?

செர்விட்டஸ் வாழ்ந்த காலத்தில், மருத்துவம், விஞ்ஞானம், அரசியல் போன்ற துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரப் போக்கு கிறித்துவத் தேவாலயங்களில் இருந்தது. அந்த ஆணவப் போக்கால், செர்விட்டஸ் ஒரு மதகுரு ஆயிற்றே என்ற இரக்கம்கூட இல்லாமல் உயிரோடு அவர்கள் ஆதிக்கம் எரித்துவிட்டது. அது மட்டுமல்ல காரணம், மற்றொரு காரணமும் அந்த மத ஆதிக்கத்திடம் இருந்தது. அதாவது, மனித உடலைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் உரிமை எந்த மருத்துவ விஞ்ஞானிக்கும் வழங்கப்படவில்லை’ என்பதே அந்தக் காரணம்.

இந்த உயிர்க் கொலைக்குப் பிறகு, எந்த மருத்துவ விஞ்ஞானியும், இதயம் என்ற பேச்சையே பேசுவதற்குப் பயந்து, எந்த ஓர் ஆராய்ச்சியிலும் எவரும் ஈடுபடாமல் இருந்து விட்டார்கள்.

மாணவ - மணிகளே! எந்தப் பிரச்சனைகள் விவாத சர்ச்சைக்கு வந்தாலும், நீங்களும் இடம், பொருள், ஏவல் என்பதை அனுசரித்து நடக்கக் கற்றுக் கொள்வது நல்லதுதானே!