பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலமி தத்துவத்தை மறுத்த விஞ்ஞானி கோப்பர் நிக்ஸ்!

கோப்பர்நிக்ஸ்

மாணவ - மணிகளே!

“கி. கீரென்று சங்கு அறுக்கும் கீரனோ என் கவியை ஆராயத் தக்கவன்? என்று சிவபெருமான் நக்கீரனாரைச் சினம் பொங்கக் கேள்வி எழுப்பினார் - மதுரைக் கடைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பாண்டியன் அவையிலே!

'சங்கு அறுப்பது எங்கள் குலம்; தம்பிரானுக்கு ஏது குலம்’ என்று முக்கண் பெருமான் சிவபிரானையே நக்கீரர் மறுத்து எதிர் வழக்காடியதைத் திருவிளையாடல் புராணம் கூறுகின்றது.

அதனைப் போலவே, எகிப்திய வானியல் மேதையான புகழ் பெற்றத் தாலமியின் தத்துவத்தை மறுத்து, உண்மை வரலாற்றை நிலை நாட்டியவர் போலந்து நாட்டு நக்கீரரான நிக்கோலஸ் கோப்பர் நிக்ஸ் என்ற வானியல் வித்தகர். அதன் விவரத்தை மாணவர்கள் அறிவது நல்லதல்லவா? அந்த விவரம் கீழே உள்ளது. படித்துணரலாம்.

கோப்பர்நிக்ஸ் என்பவர் ஐரோப்பா கண்டத்திலுள்ள போலந்து என்ற நாட்டில் டோர்ன் என்ற நகரிலே 1473-ஆம் ஆண்டில் பிறந்தவர்.

தந்தை ஒரு வணிகர் கோப்பர் நிக்சுக்கு பத்து வயதாகும்போது அவர் இறந்ததால், மாமன் பிஷப் லூகாஸ் வால்செல்ரோட் என்ற மதகுரு நிக்சை வளர்த்து, கிராகென் பல்கலைக் கழகத்தில் சேர்த்து டாக்டர் பணிக்குப் படிக்க வைத்தார். மருந்தியலில் அவர் பட்டம் பெற்றார்.

இத்தாலி நாட்டிலுள்ள போலோக்னா என்ற பல்கலைக் கழகத்தில் நிக்ஸ் சட்டம் படித்தார்; அத்துடன் கணக்கியல் துறை, வானியல் துறையிலும் நிபுணரானார். அந்த நேரத்தில் கிரீக் மொழியையும் படித்து வானியல் மூல நூல்களைக் கசடறக் கற்றுத் தேர்ந்தார். அராபியர் கணக்கியலையும் படித்தார். அவர் ரோம் நாட்டின் பல்கலைக் கழகப் பேராசிரியருமானார்.