பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

இராஜஸ்தான் மாநிலத்தின் கடைசி இந்து மத வாரிசு ஆட்சிக்குத் தலைநகர் அஜ்மீர். அந்த நகரை உருவாக்கிய அஜேய்ராஜ் என்பவரை யும், அங்கே அழகாகக் காட்சி தரும் மேரு மலையையும் இந்திய மக்கள் என்றும் மறவாது இதயத்தில் வைத்துப் பேணுகின்றார்கள்.

காஷ்மீர் இமயமலைப் பகுதியிலே உள்ள இயற்கை வளம் சூழ்ந்த ஒரு மலைநாடு. அங்கே பண்டையக் காலத்தில் காஷ்யூப் என்ற துறவி ஒருவர் தவக்கோலம் பூண்டு வாழ்ந்து வந்தார், என்பதால், அதற்குக் காஷ்மீர் என்ற பெயர் வந்தது.

இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஐந்து நதிகள் ஓடுகின்றன. "பாஞ்ச் என்றால் ஐந்து என்று பொருள். அப் என்றால் தண்ணி. ஜீலம், ஜீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ் என்ற ஐந்து ஆறுகளே அவை, பஞ்சாப் என்ற சொல் பாரசீக மொழிச் சொல். ஆகையால் அந்த ஐந்து நதி ஓடும் பிரதேசத்திற்கு பஞ்சாப் என்று பெயரிடப்பட்டது.

இந்தியாவின் மேற்குப் பகுதியில் மஹாராஷ்டிரா என்ற மாநிலம் உள்ளது. மகா என்றால் பெரிய என்றும் இராஷ்டிரா என்றால் தேசம் அல்லது நாடு என்றும் கூறப்படும். இந்த மாநிலத்தை இன்று மராட்டிய மாநிலம் என்றும் மக்கள் பெருமையோடு கூறுகிறார்கள். ஏன்?

மராட்டியர்கள் அங்கே அதிகமாக வாழ்வதாலும், மராட்டிய மாவீரன் சிவாஜி அரசு அமைத்த மாநிலம் அது என்பதாலும், அதற்கு மராட்டியம் அல்லது மஹாராஷ்டிரம் என்று பெயரிடப்பட்டது.

மேற்கு இந்தியப் பகுதியிலே உள்ள மாநிலம் குஜராத். இந்த நாட்டைக் கூர்ஜரர்கள் என்ற மக்கள் ஆட்சி செய்ததால், இப் பகுதி 'குஜராத் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இந்த மாநிலத்தில்தான் இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தந்த அண்ணல் காந்தியடிகள் பிறந்தார்.

அசாம் என்ற சொல்லுக்கு ஒரே சீராக இல்லாத, மேடு பள்ளங்கள் அதிகமாக உள்ள பூமி என்று பொருள். இது, வட கிழக்கு இந்திய பகுதியிலே உள்ளது. அதனால், சமன் இல்லாத நிலப் பகுதி அந்த நாடு என்பதால் அதற்கு அசாம் என்று பெயர் சூட்டப்பட்டது.

தென்னிந்தியாவில் ஆந்திரப் பிரதேசம் என்ற தெலுங்கு மொழி பேசும் மக்கள் வாழும் நிலப் பகுதி இருக்கின்றது. அந்தப் பழங்குடி மக்களுக்கு ஆண்ட் ஹரஸ் என்ற பெயர். அதனால் அவர்கள் ஆந்திரர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள் பிறகு ஆந்திரப் பிரதேசமானது. இப்போது சிலர் அதைத் தெலுங்கு தேசம் என்கிறார்கள்.