பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியன் ஆசை

ஒர் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அறிஞர் அண்ணா அவர்கள் இலக்கிய மேடைகளிலே பேசும்போது, இரயிலைக் கண்டுபிடித்தவர் யார்? வானவூர்தியை, கப்பலை, வானொலியை, தந்தியை, தொலைபேசியை, மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர்கள் யார், யார் என்று மக்களைக் கேட்டால் அவர்களுக்குத் தெரியாது? ஆனால், எமனுக்கு வாகனம் எது என்றால், உடனே கூறுவார்கள் எருமைக் கடா என்று! இந்த உலகம் எவ்வாறு இயங்குகின்றது என்று கேட்டால் தெரியாது. ஆனால், உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் சமுத்திரத்துக்குள் ஒளிந்து கொண்டவன் யார்? என்று கிராம மக்களைக் கேட்டால் கூடபோதும் உடனே இரண்யன், இரண்யாக்கதன் என்று கூறுவார்கள்."

"கண்ணுக்கு எதிரே நடக்கும் விஞ்ஞான அற்புதங்களை மக்கள் அறிய மாட்டார்கள். ஆனால், கண்ணுக்குத் தெரியாத மூட நம்பிக்கைகளை, ஏதோ நேரில் கண்டு அனுபவித்த வரலாறுகளைப் போலவே கூறுவார்கள்' என்று குறிப்பிடுவார்.

அத்தகைய மனப்பான்மை கொண்ட மக்கள், அறிஞர் அண்ணா அவர்கள் வாழ்ந்த கடந்த நூற்றாண்டில் மட்டுமன்று, இனி வரும் நூற்றாண்டுகளிலும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள். ஏனென்றால், ஏறக்குறைய ஐந்தாறு ஆயிரம் ஆண்டுகளாக இந்தச் சமுதாயத்தைப் புராணம், இதிகாசம், வேதம், உபநிடதம், ஆகமம், சாஸ்திரம் சம்பிரதாய மூடநம்பிக்கைகள் என்ற ஆதிக்கம் ஆட்சி செய்து வருகின்றது என்பதே தலையாய காரணமாகும்.

இத்தகையச் சமுதாயம் ஈன்றெடுத்த மாணவர்கள் - மாணவிகளும், சிறுவர் சிறுமிகளும் இன்றுவரை சற்றேறக்குறைய அதே மனப்பான்மையில் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள். ஆங்கிலக் கல்வி அத்தகையோருள் சிலரை, அறிவியல் சிந்தனையெனும் அமுதத்தை ஊட்டி வளர்த்து வருவதால், அந்தச் சிலர் விஞ்ஞான விழி பெற்று; இந்த வியனுலக வளர்ச்சியை உற்று நோக்கி உலகத்தோடு ஒட்டி ஒழுகுகிறார்கள். காரணம், பல கற்றும் அறிவிலாதாரராக ஆகிவிடக் கூடாதே என்ற நாகரிக நாணம்தான்!

iii