பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

அந்தக் கிராமத்து விவசாயி ஒருவர், ஊராட்சி மன்ற அதிகாரியிடம், “குளத்தில் தொங்க விட்டிருந்த அறிவிப்புப் பலகையை ஏன் எடுத்து விட்டீர்கள், ஆபத்து நீங்கிவிட்டதா?” என்று கேட்டார்.

“அந்தக் குளத்தில் யாரும் இறங்கவில்லை, ஒரு ஆபத்தும் உண்டாகவில்லை. அதனால், அந்தப் பலகையை அகற்றி விட்டோம்” என்று பதில் அளித்தார் ஊராட்சி மன்ற அதிகாரி.

ஆபத்து ஏற்படவில்லை என்பதற்காக அறிவிப்புப் பலகையை அகற்றி விடுவது நியாயமா? அரசு ஊழியர்களின் புத்தி விபரீதமானது.


17
எதையும் எளிதில் மாற்ற முடியுமா?

ஒரு அரசன் தன்னுடைய நாட்டு மக்கள் கடைப்பிடித்து வரும் பழக்கங்களும், நடைமுறைகளும் நாகரீகம் இல்லாமல், இருப்பதாக வெறுப்படைந்தான். அவற்றை எல்லாம் மாற்றி அமைத்து, புதுமையான பழக்கங்களை புகுத்த விரும்பினான். அரசன் ஒரு நாள் அமைச்சர்களைக் கூட்டிவைத்து, “ஒரு குழுவினர் முன்னேறிய நாடுகளுக்குச் சென்று, அவர்களுடைய பழக்கங்கள், நாகரீகங்கள் முதலானவற்றை அறிந்து வந்து, நம்முடைய நாட்டில், அவற்றை எளிதாக நிறைவேற்றலாம் என்று நினைக்கிறேன் உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டான்.

அரசன் கூறியதை அமைச்சர்களும், அதிகாரிகளும் ஆமோதித்துக் பாராட்டினார்கள்.

அரசன் கூறியதைப் பாராட்டாமலும், பதில் கூறாமலும் ஒரு அமைச்சன் மெளனமாக இருந்தான்.