பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆலவாய் நிகழ்ச்சிகள் 121



என்ற அடிகளது வாய்மொழி கொண்டு உய்த்துணரலாம். இவ்வொலியைச் செவிமடுத்த அடிகள் இஃது என்னை யாண்ட எம்பெருமானது பாதச் சிலம்பொலியே எனத் தெளிகின்றார்; இறைவனை இறைஞ்சுகின்றார். அந்தப் பெருமான் கொண்டுவந்தமை யுணராது அவற்றைக் கொண்டு வருமாறு இறைவனைப் பணிந்து வேண்டுகிறார். பரிகள் வந்து கொண்டிருப்பதைக் காண்கின்றனர் சிறைக் காவலர்கள். அவர்கள் வாதவூரடிகளையணுகிக் குதிரைகளின் வரவைப் பாண்டியனிடம் நேரில் சென்று தெரிவிக்குமாறு சொல்லி அவரைச் சிறையினின்றும் விடுவிக்கின்றனர். அடிகளும் அரசனிடம் நேரில் சென்று செய்தியைத் தெரிவிக்க அரசனும் குதிரைகளின் வரவை எதிர்பார்த்த வண்ணம் வீதியின்கண்ணதாகிய மண்டபத்தில் வந்து அமர்கின்றான். மன்னன் அதிக நேரம் காத்திருந்தும் இறைவனது அருள் விளையாட்டால் குதிரைகள் வரத் தாழ்க்கின்றன. பரிகளைக் காணாத பாண்டியன் மனம் புழுங்கி ஒற்றர்களை ஏவுகின்றான். அவர்கள் நாற்றிசையிலும் சென்று நோக்கிக் 'குதிரைகளைக் கண்டிலோம் எனக் கூறுகின்றனர். இது கேட்டு வெகுண்ட வேந்தன் பொருள்களை வீணாகச் செலவிட்டதுமன்றி, குதிரைகள் வருவதாகச் சொல்வி ஏமாற்றும் அமைச்சனை ஊரினுள் கொண்டு போய் நிறுத்திப் புளியம்வளாரால் அடித்துத் துன்புறுத்துமின் எனத் தண்டத் தலைவர்களை நோக்கிக் கூற, அவர்களும் அடிகளை அவ்வாறே இழுத்துச் சென்று துன்புறுத்தத் தொடங்குகின்றனர். அடிகள் கண்களில் நீர்மல்கத் திருமுகம் வியர்க்கச் சிவபெருமானை நினைந்து அடைக்கலப் பத்து பாடுகின்றார். சிறைக் கூடத்தருகே சோலையில் புகுந்த குயிலை நோக்கிக் குயிற் பத்து பாடுகின்றார். இவ்வளவில் இறைவனருளால் குதிரைகள் மதுரை நகருக்குள் புகுகின்றன. அவற்றைக் கண்ட அரசன் பெரிதும் வியந்து வாதவூரடிகளை வர