பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 மாணிக்கவாசகர்



பேரவையை அடைகின்றார். முகவாட்டத்துடன் இருக்கும் மன்னனைக் காரணம் வினவுகின்றார். அவ்வுரை கேட்ட மன்னன் அடிகளைச் சினந்து நோக்கிப் பலவாறு இகழ்ந்துரைக்கின்றான். பின்னர் தண்டலாளரை நோக்கி "வாதவூரனாகிய இவனைக் கொண்டுபோய்த் தண்டித்துப் பொருளை வாங்குமின்' என ஆணையிடுகின்றான். அவர்களும் அடிகளைச் சிறையிலிட்டுப் பலவாறு தண்டிக்கின்றனர். அரசனும் மனக்கவலையுடன் தனித்திருந்து வருந்துகின்றான். தண்டனைகளைப் பொறுக்க முடியாத வாதவூரர் அளவிலாத் துயரத்தால் மனங்கலங்கி திருவேசறவு என்ற பனுவலைப் பாடி இறைவனை நினைந்து புலம்புகின்றார்.

இறைவன் அன்பனாகிய அடிகளின் துயரத்தைப் போக்கத் திருவுளங் கொள்ளுகின்றார். வருணனை நினைக்க, அவனும் விரைந்து வந்து பணிந்து நிற்கின்றான். "நீ வாதவூரர் படும் சிறைத் துன்பம் நீங்கக் கங்குற் பொழுதில் வைகையாற்றில் பெருவெள்ளம் வரச்செய்வாயாக" எனப் பணிக்கின்றார் . வருணனது ஏவலால் மேகங்கள் திரண்டு மழையைப் பொழிகின்றன; வைகை பெருக்கெடுத்து ஒடுகின்றது. அதன் கரைகளையுடைத்துக் கொண்டு மதுரை நகருள்ளும் புகுகின்றது. இச்செய்தி பறையறைவித்து ஊர்ப்பெருமக்களுக்கு அறிவிக்கப் பெறுகின்றது. பறையொலி கேட்டுத் துணுக்குற்ற பாண்டியன் காலமல்லாக் காலத்தே வைகை கடலெனப் பெருகியதே? இஃது என்ன ஊழிக்காலமோ? என மனம் கவல்கின்றான். நாடு கண்காணிக்கும் தனது அதிகாரியை அழைப்பித்து, வாதவூர் முனிவரை நாம் சிறை செய்ததனால் விளைந்த துன்பமோ? இறைவன் திருவுள்ளத்தை யார் அறிவார்? மதுரை நகருள் மனைக்கட்டுடன் குடியிருப்போர்


13. பரஞ்சோதி திருவிளையாடலில் கங்கையை ஏவி வெள்ளம் பெருகச் செய்தார் என்று சற்று மாறுபாடான வரலாறு காணப்படுகின்றது. -