பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1.பிறப்பும் வளர்ப்பும்



தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

என்று மாணிக்கவாசகர் போற்றும் பழம்பதியாகிய பாண்டி நாட்டில் வைகையாற்றங்கரையிலுள்ள திருவாதவூர் என்பது ஒரு சிற்றுார். மதுரைக்குக் கிழக்கே சுமார் 12 கல் தொலைவிலுள்ளது; பேருந்து வசதியுண்டு. இன்றளவும் சாலை நன்கு சீர்படவில்லை. 1979 ஆண்டு மே மாதம் கொடைக்கானலில் 10 நாள் என் மனைவியுடன் தங்கி மதுரைக்கு வந்தேன். மங்கம்மாள் சத்திரத்தில் இடம் கிடைக்காததால், காலேஜ் அவுஸ் என்ற விடுதியில் இருவரும் தங்கினோம். வந்த மறுநாள் காலை மணிவாசகப் பெருமான் அவதரித்த திருத்தலத்தைப் பார்க்க வேண்டும் என்ற அவா எங்கள் மனத்தில் எழுந்தது. மதுரை-அழகர் கோயில் சாலையில் திருமோகூருக்குத் திரும்பும் சாலை வழியாக இந்த ஊரை அடைய வேண்டும். காலை 6மணிக்கே நீராட்டம்,சிற்றுண்டி இவற்றை முடித்துக் கொண்டு திருவாதவூருக்குப் புறப்பட்டோம்: வெயிலேறு வதற்கு முன் திரும்பி விடவேண்டும் என்பது எங்கள் திட்டம். ஒரு மணி நேரத்தில் அந்த ஊரைச் சென்றடைந்தோம். கோடைக் காலமாதலால் ஒரே வறட்சி. எம்மருங்கும் கோடையோடிய வயல் தான் காட்சி அளிக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/19&oldid=1011725" இலிருந்து மீள்விக்கப்பட்டது