பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற இடங்களில் அருளிச் செயல்கள் 175



ஆழங்கால் பட்டால் பக்தியின் கொடுமுடியை எட்டிப் பிடிக்கலாம். காழிப்பிள்ளையார் திருவவதரித்த கழுமலத்தில் சில நாட்கள் தங்கிப் புறப்படுகின்றார் அடிகள்.

அடுத்து அருகிலிருப்பது தில்லை என வழங்கப்பெறும் சிதம்பரம், விண்ணளாவிய கோபுரங்கள் அடிகள் கண்ணில் படுகின்றன. மிதிலையை நோக்கி விசுவாமித்திரருடன் இராமலட்சுமணர்கள் செல்லும்போது அந்நகரத்துக் கொடிகள் இராமனை விரைவில் வருமாறு அழைத்ததாகக் கம்பன் கூறுவான்.

  மையறு மலரின் நீங்கி
     யாம்செய்மா தவத்தின் வந்து 
  செய்யவள் இருந்தாள் என்று
     செழுமணிக் கொடிகள் என்னும் 
  கைகளை நீட்டி அந்தக்
     கடிநகர் கமலச் செங்கண் 
  ஐயனை ஒல்லை வாவென்(று)
     அழைப்பது போன்ற தம்மா. 14

(செய்யவள் - திருமகள்: கமலம் - தாமரை, கடிநகர் - காவலையுடைய நகரம்; ஐயன்-இராமன்; ஒல்லை - விரைவில்)

என்ற பாடலில் அற்புதமான வரவேற்பைக் கண்டு மகிழலாம். இம்மாதிரி அடிகளை அழைக்கின்றன தில்லைக் கோவிலின் திருக்கோபுரங்கள். அங்குப் போய்ச் சேர்ந்து விடலாம் என்ற விருப்பம் இருந்தாலும் குருநாதன் ஆணைப்


14. பாலகாண், மிதிலைக் காட்சி-1