பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230 மாணிக்கவாசகர்



மற்றொருத்தி: ஆம்; பொருந்தும். ஏனென்றால் ஈசன் தானே இயற்கையாகவும், அதிலுள்ள உயிர்கள் அனைத்துமாகவும் இலங்குகின்றான். அவனுடைய இயல்பே இப்படி மூன்று விதங்களில் உருவகப்படுத்தி விளக்கம் பெற்றுள்ளது.

இக்கருத்தை அற்புதமாகத் தெளிவாக்குவர் தவத்திரு சித்பவானந்த அடிகள்.

"ஒருதேசம் இயற்கையாய் அமைந்தது. அதை விளக்க தேசப்படம் மனிதனால் அமைக்கப்பெற்றது. இயற்கையானது இறைவனின் உண்மை சொரூபம். இனி அவரை ஒரு மனிதனாகச் சமைத்து, நீறு பூசுவித்து, பாம்பு அணிவித்து வேதம் ஒதப் பண்ணியது மனிதனது கற்பனை. ஆயினும் இந்தக் கற்பனை மூலம் தத்துவம் மிளிர்கின்றது. இந்தத் தத்துவத்தை எந்தச் சமயவாதியும் மறுக்க முடியாது. உலகம் அழியும் தன்மையது; இறைவன் அழியாதிருப்பவன். உலகப் பொருள் ஒன்றில் அழியும் பகுதி தகனமாகின்றது. அழியாப் பகுதி சாம்பலாய் எஞ்சி நிற்கின்றது. பிறகு அதை எவ்வளவு சுட்டாலும் சாம்பலாகவே நிற்கும். எனவே சாம்பல் பரம் பொருளின் சின்னம். அழியும் தன்மையுள்ள அகிலத்திற்கு ஆதாரமாக அழியாப் பொருள் ஒன்று உண்டு என்னும் உண்மையை விளக்குகிற சின்னம் திருநீறு.

ஈசனுடைய படைப்பில் இனியவை இடம் பெற்றிருப்பது போன்று இன்னாதவைகளும் இடம்பெற்றுள்ளன. உயிர்களின் முன்னேற்றத்திற்கு இன்னாதவை எதிர்மறையில் தாண்டுதல் போடுகின்றன. எனவே அவை முற்றிலும் தேவையாகின்றன. சிவன் அரவத்தை அணிந்திருப்பதன் உட்கருத்து இதுவேயாகும்.

சரம் - அசரம், சேதனம் - சடம் ஆகிய அனைத்திலும் அறிவு மிளிர்கின்றது. ஏனென்றால் அனைத்தும் அறிவினின்றும் வடிவெடுத்தவைகள், எது வித்தையின் சொரூபமோ