பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை அருளிச் செயல்கள்-2 261



முந்திய உபாதி ஒழிகின்றது. நீர் ஒரே சமயத்தில் உறைபனி யாகவும், ஆவியாகவும் இருப்பதில்லை, அதுபோலவே சீவான்மாவும் ஒரே காலத்தில் கல் ஆகவும் புல் ஆகவும் இருப்பதில்லை. உபாதியானது மாறி அமையும் தன்மை யுடையது என்பதை நாள்தோறும் கனவுநிலை மெய்ப்பிக்கின்றது. உபாதி நிலையற்றது என்பதை சுழுத்தி அல்லது கனவற்ற உறக்கம் உறுதிப்படுத்துகின்றது. அயர்ந்த உறக்கத்தில் மனிதன், விலங்கு, பறவை ஆகிய சீவான்மாக் கள் அனைத்தும் ஒரே அபேத நிலையில் உள்ளன. பின்பு உறக்கமோ தமோ குணத்தின் விளைவு. அஃது அஞ்ஞானத்தில் இடம்பெற்றுள்ளது. நனவுக்கு வந்தவுடனே சீவபேதம் என்னும் உபாதியும் தோற்றத்திற்கு வருகின்றது.

ஆனால் 'நிர்விகல்ப சமாதி' என்னும் அதீத நிலை முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டது. கால தேச வர்த்த மானம் ஆங்கு அடிபட்டுப் போகின்றன. மனம் என்னும் மாயை மாண்டு ஒழிகின்றது. கடலை ஆழம் பார்க்கப் போன உப்பு பொம்மை தனது வடிவம் என்னும் உபாதியை இழக்கின்றது. ஆனால் அதன் உண்மைச் சொரூபம் ஆகிய அகண்டாகாரம் அதற்குச் சொந்தமாகின்றது. கடலுக்குள் விழுகின்ற மழைநீர்த்துளி தனது வடிவம் என்னும் உபாதியை இழக்கின்றது. ஆனால் நீர் என்னும் அதன் உண்மை நிலை அகண்டாகாரமாகின்றது. அங்ஙனம் சமாதி நிலையில் பரம்பொருளில் கலக்கும் சீவன் பரம்பொருள் ஆகின்றான். இதுவே சிதம்பர இரகசியம். ஆங்குச் சென்ற சீவன் திரும்பி வருவதில்லை. அதாவது அவனது உபாதி அழிந்து பட்டுப் போகின்றது. சுத்த சைதன்யம் அல்லது அகண்ட சச்சிதானந்த சிவமே யாண்டும் உள்ள மெய்ப் பொருள், உபாதியை ஒழிக்கின்ற சிவன் சிவம் ஆகின்றான்.