பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருளிச் செயல்கள் 303



என்று கூறித் தன்சிவபக்தியைப் புலப்படுத்துகின்றாள். இது தாய் 'சுடரோடிறத்தல்' என்ற துறையில்,

                          நானனுகப் 
     பெற்றேன் பிறவி பெறாமற் செய்தோன்
        தில்லை (232)

எனத் தான் சிவபிரானை நணுகியதையும், நணுகியதால் பிறவி பெறாமல் அவன் செய்ததையும் குறிப்பிடுதல் காணலாம்.

அகனைந்திணைக் கோவையாகிய இப்பனுவலில் பாடாண்தினை என்னும் புறத்திணை அமையப் புலவரால் பாராட்டப்பெறும் பாட்டுடைத் தலைவன் தில்லைச் சிற்றம்பலவன். கூற எடுத்துக் கொண்ட அகப்பொருள் ஒழுகலாற்றொடு தொடர்புடையவன் கிளவித் தலைவன். கிளவித் தலைவனது இயற்பெயர் கூறுவது அகப் பொருள் மரபன்று. கிளவித் தலைவனும் அம்பலவன் திருவடியைத் தன் சென்னியிலும் சிந்தையிலும் கொண்டு போற்றும் திருத்தகவுடையவன். தில்லைச் சிற்றம்பலவனே திருப்பெருந்துறையில் குருவின் திருமேனி கொண்டு அடிகளை ஆட்கொண்டமையால் பசு கரணங்களெல்லாம் பதி கரணங்களாக மாறப்பெற்ற அடிகள் ஐம்பொறி உணர்வுகள் நிங்கப் பெற்றவர். இந்நிலையில் அறிவன் நூற்பொருளும் உலக நூல் வழக்கும் என இருபொருள்களையும் விளக்கும் பாங்கில் இத்திருக்கோவையினை அருளிச் செய்துள்ளார். அறிவன் நூற்பொருளான்து. முற்றுணர்வினனாகிய இறைவன் அருளிச் செய்த ஆகம நூல் வழியில் கூறப்பெற்ற ஞானயோக நுண்பொருள். உலக நூல்வழக்காவது, ஒத்த இன்புடைய ஒருவனும் ஒருத்தியும் ஆகிய இருவரும் நல்லுழின் செயலால் எதிர்ப்பட்டு ஒருவரையொருவர் இன்றியமையாதவராய் மறைவில் கலந்து அளவளாவிப்


மா-20