பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310 - மாணிக்கவாசகர்



பொருளின் புறத்ததாகித்தோன்றும் பொருள்; அதாவது, "கருப் பொருளாகி நாட்டிற்கும் ஊர்க்கும் துறைக்கும் அடையாகி வருவது' என்று விளக்குவர் இளம்பூரணர்.

  நறமனை வேங்கையின பூப்பயில் 
     பாறையை நாகநண்ணி 
  மறமனை வேங்கையென நனியஞ்சு
     மஞ்சார் சிலம்பா 
  குறமனை வேங்கைச் சுணங்கோ
     டணங்கலர் கூட்டுபவோ 
   நிறமனை வேங்கை யதள்அம்
      புலவன் நெடுவரையே.
                                -திருக்.96.

(நறமனை - தேனிற்கு இடமாகிய; நாகம் - யானை: வேங்கை - புலி, சிலம்பன் - மலை நாட்டவன்; அதள் - தோல், வரை - மலை)

என்ற பாடல் இசையாமை கூறி மறுத்தல் என்ற துறையில் எழுந்தபாடல். களவொழுக்கம் ஒழுகா நின்ற தலைமகன் கழுநீர் மலரைக் கையுறையாகக் கொண்டு சென்று அதனை ஏற்றுக் கொள்ளும்படி தோழியை வேண்டுகின்றான். அவள் தெய்வத்திற்குரிய அம்மலர் எம் குலத்திற்கு இசையாது’ எனக் கூறி மறுப்பதாக அமைந்தது இப்பாடல்.

"தேனிற்கு இடமாகிய வேங்கைப் பூக்கள் நிறைந்துள்ள பாறையை யானை சென்றணைந்து (அப்பாறையைத்) தறுகண்மைக்கு இடனாகிய புலி என்று (எண்ணி) மிகவும் அஞ்சும் மேகம் தவழும் மலையினையுடைய தலைவனே, நிறந்தங்கிய புலித்தோலை அணிந்த அம்பலவனது நீண்ட இம்மலையின் கண்ணே குறவர் மனையில் உளவாகிய வேங்கையினது சுணங்குபோலும் பூக்களோடு தெய்வத்திற் குரிய கழுநீர் முதலாகிய பூக்களைக் கூட்டுவரோ? கூட்டார்” என்பது இப்பாடலின் பொருளாகும்.