பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமைச்சர் வாழ்வு 15




   'இம்மை யாசையும் மறுமையில்
        ஆசையும் இகந்து 
   செம்மை யாகிய கருத்தராய்ப்
        பரகதி தேர்வார்.  6

(விவேகம் - உணர்ச்சி; புந்தி - உள்ளம்; இகந்து . நீங்கி; பரகதி - வீடடையும் நெறி)

என்று காட்டுவர். ஈண்டு மெய்ம்மையாம் பொருள் என்பது நித்தியப்பொருள்; தனக்கோர் ஆக்கக் கேடுகளின்றிச் சுட்டறிவிற்படாது நின்ற சத்துப் பொருளாகும் யாம்பொருள் என்பது, அநித்தியப் பொருள்; ஆக்கக் கேடுகள் உடையதாய்ச் சுட்டறிவிற்கு எட்டி நிற்கும் அசத்துப் பொருள். இம்மை மறுமை இன்பங்கள் இந்திரசாலம் போலத் தோன்றும்போதே இலவாதலும், கனவு போல முடிவு போகாது இடையே அழிதலும், பேய்த்தேர் போல ஒரு காரணம் காட்டி நிலைபெறாமையும் உடைமையால் இந்த இரண்டின்பாலும் உள்ள ஆசை கழன்று போகின்றது. செம்மையாகிய கருத்தராய் என்பது சிவபுண்ணிய முதிர்ச்சி யால் இருவினை யொப்புடையராகி விடுகின்றார் என்பதைக் காட்டுகின்றது.


நாடோறும் மதுரையைச் சுற்றிப் பார்க்கும்போது ஏழைகள் படுந்துன்பங்கள் இவர் கண்ணில் படுகின்றன. அவற்றைத் துடைத்து அவர்கட்கு உதவுகின்றார். பிறப்பு, இறப்பு வட்டங்கள் அவர் சிந்தையில் உதயமாகின்றன. உயிர்களின் பல்வேறு பிறப்பு வட்டங்கள். அவற்றின் பல்வேறு தோற்றங்கள், அவை நுகரும் இன்ப துன்பங்கள் இவற்றைப் பற்றிச் சிந்திக்கின்றார். பிறப்பு, இறப்பு, பிணி, மூப்பு, சாக்காடு மாக இருக்கும் இந்த வாழ்க்கை வட்டத்தைப் பற்றியும் சிந்தனை எழுகின்றது.


6. வாதவூரடிகளுக்கு-10.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/33&oldid=1012187" இலிருந்து மீள்விக்கப்பட்டது