பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை அருளிச் செயல்கள் 57




வாழாப்பத்து (28)' 14

"இறைவனாகிய நினது பற்றினை யன்றி இவ்வுலகப் பொருள்களில் சிறிதும் பற்றுடையேன் அல்லேன்: உலக வாழ்க்கையில் சிக்குண்டு மேலும் வாழ்தற்கு விரும்புகின்றிலேன்; எளியேனை நின்பால் வருமாறு அழைத் தருளி நின்திருவடி நிழலில் கூட்டி அருள்புரிவாயாக' என்று இறைவனை வேண்டி அழுதரற்றி முறையிடும் நிலையில் அருளிச் செய்யப்பெற்றது இப்பத்து. வாழ்க்கை என்பது பற்றால் விளைவது; அந்தப் பற்று அற்றவிடத்து வாழாமையே வேண்டப்படுவது ஆதலால் "நான் பற்றும் அற்றிலேன்' என்று கூறி வாழாமை வேண்டப்படுகின்றது. வாழாப்பத்து-வாழவிரும்பாமையைப் புலப்படுத்தும் பத்துப் பாடல்களால் ஆனது. இதில்,

  பஞ்சின்மெல் லடியார் பங்கநீ யல்லால்
     பற்றுகான் மற்றிலேன் கண்டாய் 
  செஞ்செவே யாண்டாய் சிவபுரத் தரசே
     திருப்பெருந் துறையுறை சிவனே 
  அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ யளித்த 
     அருளினை மருளினான் மறந்த 
  வஞ்சனே னிங்கு வாழ்கிலேன் கண்டாய்
     வருகவென் றருள்புரி யாயே (6)

(செஞ்சவே - செம்மையாக, மருள் - மயக்கம்)

என்பது ஆறாம் பாடல். பற்றறுதல் முத்திக்கு உபாயம் ஆதலின் இதற்கு முத்தி உபாயம் என்று பண்டையோர் குறித்தனர், "நீண்ட உலகத்தில் பற்று ஒன்று இலேன்; இவ்வுடற்கண் நின்று வாழேன்; நின்பத நிழற்கீழ் வருக என்று அருள்புரிக' என்று சொல்வது வாழாப்பத்து என்று கூறுகின்றது திருப்பெருந் துறைப்புராணம்,


14. திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பெற்றதாகவே திருவாதவூரர் புராணமும் கூறும,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/75&oldid=1013165" இலிருந்து மீள்விக்கப்பட்டது