பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை அருளிச் செயல்கள் 61



நிலையாப் பொருள்களும் திருவருளால் நன்கு விளங்கவும் திருவருள் ஒளியோடு கூடிவந்துள்ள பரிமாவின்மேல் இவர்ந்து வந்து தன் இயற்கைப் பொருள் பேரொளியாய் காட்சியளித்து மீனவன்முன் எழுந்தருளி வந்தனன்; அப்பேரொளியின் சார்பு பேற்றால் மீனவனும் அறியாது காணும் வாய்ப்புப் பெற்றனன்; பெற்றும் இன்னவாறு இருந்ததென்று கண்ட மீனவனுக்கும் சொல்ல முடியாது; அவன் அத்தகைய வன்மையுடையவனும் அல்லன்: ஐம் பொறி வாயிலாகச் செல்லும் மனத்தினையும், அம்மனத்தினை இயைந்து தூண்டும் அறிவினையும், "சென்ற இடத்தால் செலவிடாது தீதொரீஇ. நன்றின்பால் உய்ப்பது அறிவு" ஆதலால் நல்லதன்கண் உய்க்கவும் தீயதன்கண் விலக்கவும், விரும்பினால் விரும்பிய பொழுதே அவ்வாற்றால் சிவபெருமானின் திருவடியினை வேண்டினால் உயிர்கட்குக் கைகூடும். பாண்டியனாகிய தென்னாடுடைய சிவன் திருவருள் செல்கின்ற திருவடியாகிய வீடுபேற்றினைத் தந்தருளும் பரிசும் இதுவேயாகும்' என்கின்றார்.

திருவார்த்தை(43)

சிவபெருமான் குருவாக எழுந்தருளி முழுமுதற்பொருளாகி தன் உண்மையினை வெளிப்படுத்தியருளியது முதலாகத் தன் சீரடியார்களுக்கு அருளிய திறங்களாகிய புகழ்ச்செய்திகளைப் போற்றிப் பரவும் பொருளுரையாக அமைந்தது திருவார்த்தை என்னும் இப் பதிகம். இறைவன் தன் அடியார் பொருட்டு எளிவந்தருளிய செயல்களைக்குறிக்கும் இப்புகழுரைகளை அறிந்து போற்றும் அடியார்கள் எம்பிரான் ஆவார் என அடிகள் இப்பதிகப் பாடல் தோறும் உளமுருகிப் போற்றியுள்ளமை காணலாம்.

  அறம் பெருகும் பெருந்துறையில் தமையாண்ட
     செயல்முதலா அரன்சீ ராட்டின் 
  திறமறிவார் எம்பிரானவரென
     வுரைத்தல் திரு வார்த்தை யாகும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/79&oldid=1013197" இலிருந்து மீள்விக்கப்பட்டது