பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை அருளிச் செயல்கள் 67



பெருமானை உள்ளவாறு காணப்பெற்றிலர் என்பார் "மால் அயனும் கண்டாரும் இல்லை" (1) என்கின்றார். இங்ஙணம் திருமாலும் நான்முகனும் காணாக் கடவுள் தன் கருணையினால் எளிவந்து தோன்றி என்னைத் தன் தொண்டனாக ஏற்றுக் கொண்டருளினான். அவனது கைம்மாறு வேண்டாக் கடப்பாடாகிய பேரருளுக்குக் கடையேன் செய்யும் கைம்மாறு எதுவும் இல்லை என்பார். 'கடையேனைத் தொண்டாகக் கொண்டருளும் கோகழி எம்கோமாற்கு நெஞ்சமே உண்டாமோ கைம்மாறு உரை" என்கின்றார். இப்பனுவலில் ஏழு வெண்பாக்கள் உள்ளன. இவை ஒன்றோடொன்று பொருள் தொடர்பு உள்ளனவாக அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன. திருப்பெருந்துறை இறைவனை நண்ணி வழிபடும் நம்மவராகிய அடியார்கள் அனைவரும் பாசத்தொடர்பு அற்று இடர்கள் எல்லாம் நீங்கிப் பேரின்ப வாழ்வு பெற்று இன்புறுவர் என்ற உண்மையினை அடிகள் தமது அநுபவம் கொண்டு ஐயமின்றித் தெரிவிக்கும் முறையில் அமைந்தது இத்தெய்வப்பனுவல். ஆகவே, இதற்கு அநுபவத்திற்கு "ஐயமின்மை உரைத்தல்” என இதற்குக் கருத்துரை வழங்கியுள்ளனர் முன்னோர். 'திருப்பெருந்துறையை வாழ்த்துகின்ற அடியார்களே, பாசபந்தம் அறுத்து வாழ்வார்கள் என்பதைச் சொல்வது பண்டாய நான்மறையாம்' என்று கூறும் திருப்பெருந்துறைப் புராணம். இப்பனுவலின்கண் உள்ள பாடல்கள் அடிகளது அநுபவத்தினை இனிது புலப்படுத்தும் நிலையில் அமைந்திருத்தலைக் காணலாம். சிவஞானம் என்னும் தேனை சிவன் நல்கியருள்கின்றான். அதன் விளைவாக மும்மலங்கள் அழிகின்றன. பிறவிக்காடு வேரோடு அழிந்து போகின்றது’(2)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/85&oldid=1013243" இலிருந்து மீள்விக்கப்பட்டது