பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 4}. புலவர் கா. கோவிந்தன்

"தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்

இனிது எனக் கணவன் உண்டலின்,

நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே." என்றார் புலவர் கூடலூர் கிழார். ஒரு பெண்ணுக்குக் கணவனுடைய பாராட்டைப் பெறுவதைக் காட்டிலும் பேரின்பம் வேறு இல்லை; அதைக் காட்டிலும் பெருமை அவளுக்கு வேறு இல்லை. அதிலும் - கணவன் பாராட்டு மனைவியின் புறக்கோலம் பற்றியதாகாது, அகநலம் பற்றியதாயின், அப்பாராட்டு, உண்மையில் ஒப்புயர்வற்ற பெரும் பாராட்டேயாகும். அத்தகைய அகநலம் பற்றிய பாராட்டைக் கண்ணகி பெற்றுள்ளாள். அதிலும், காட்சிக்கு இன்பம் நல்கும் புறக்கோல நலங்கட்கு எளிதில் அறிவைப் பறி கொடுக்கும் உள்ளுரம் இல்லாக் கோவலன், அவள் பண்பு நலம் கண்டு பாராட்டினான் என்றால், அது, அவள்தன் அளக்கலாகாப் பெருமைக்கு அரண் செய்வதேயாம்.