பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 11

மகனையும் கொண்டுபோயினையே எனக் கேட்டுச் சோணாட்டின்மீது படையெடுத்து வந்து தன் நாட்டுக் குடிகளைச் சிறைவீடு செய்து சென்றவன்' என இலங்கை வரலாற்று நூலாம் மகாவம்சத்தால் பாராட்டப் பெறுபவனும், சேரன் செங்குட்டுவனோடு சிறந்த நட்புடையவனும் ஆகிய கயவாகு என்ற காவலனும் கண்ணகியை வழிபட்டான். செங்குட்டு வன் நண்பனாய்ச் சேரநாட்டுத் தலைநகர்க்கு வந்து, பத்தினி விழாவில் பங்குகொண்ட கயவாகு, அவளுக்கு இலங்கையிலும் கோயில் கட்டிச் சிலை நாட்டிச் சிறப்புச் செய்தான். -

"அது கேட்டுக் கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான், நங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்டம் முந்துறுத்து, ஆங்கு அரந்தை கெடுத்து வரம்தரும் இவள் என ஆடித்திங்கள் அகவையின் ஆங்கு ஒர்பாடி விழாக்கோள் பன்முறை எடுப்ப, மழை வீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று” என்ற உரைபெறு கட்டுரை காண்க.

இலங்கையில் கண்ணகிக்குக் கயவாகு அமைத்த படிவம், 1830-ஆம் ஆண்டு, ஆங்கிலேயரால் இங்கிலாந்து நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அந்நாட்டு அரும்பொருட் காட்சி சாலையில் வைக்கப் பட்டுளது என்பர் வரலாற்று நூல் பேராசிரியர் பலரும். இவ்வாறு, தமிழ்நாட்டு மூவேந்தர்களால் மட்டுமேயல்லாமல், பிறநாட்டுப் பேரரசர் பலராலும் வணங்கி வழிபடத்தக்க விழுமியோளாய் விளங்கினாள் கண்ணகி.