பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 ல் புலவர் கா. கோவிந்தன்

கடந்து கொண்டிருந்தாள் கண்ணகி. அப்போது அவ்வழி வந்த வம்பப் பரத்தர் சிலர், அடிகளாரை அணுகி, கண்ணகியையும் கோவலனையும் சுட்டிக்காட்டி, "யார் இவர்?’ என்று வினவ, அடிகளார், "என் மக்கள் காணிர்!” என விடையிறுத்த அளவே, அவ் வம்பப்பரத்தர், "ஒரு தாய் வயிற்றில் பிறந்தோர் கணவனும் மனைவியுமாதல் உண்டோ?” என எள்ளி நகையாடிக் கேட்டனர். அவ்வம்புரை கேட்டுக் கண்ணகி கலங்கிவிட்டாள்; கண்ணகியின் கலக்கம் கண்டதுமே, கவுந்தி அடிகளார்க்குக் கடுஞ்சினம் பிறக்க, “முதுநரி ஆகுக" எனச் சாபம் இட்டார்; வம்பப்பரத்தரும் முதுநரி ஆக மாறிக் கூக்குரல் எழுப்பியவாறே ஒடத் தொடங்கினர்; அது கண்டாள் கண்ணகி, அவள் உள்ளம் கலங்கிவிட்டது; தன் மனம் நோகப் பண்ணியவர் என்பதை அறவே மறந்தாள்; அடிகளாரை அணுகி,

"நெறியின் நீங்கியோர் நிரல கூறினும்

அறியாமை என்று அறியல் வேண்டும்"

என்று அறநெறியைச் சுட்டிக்காட்டி, "அம்மையே! உம் திரு முன் பிழை புரிந்தோர்க்கு உய்திக்காலம் உரையிரோ?” என வேண்டிக்கொண்டாள். கவுந்தியும் ஒருவாறு சினம் தணிந்து சாப விடை தந்தார். இவ்வாறு, இன்னா செய்தார்க்கும் இனியவே செய்த கண்ணகியின் பேரருட் பெருமையை உணர்ந்தார், அவளை, உளமாரப் பாராட்டாது ஒழிவரோ?