பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 137

கணவன் இறந்துவிட்ட அந்நிலையில், அக்கடமையைத் தான் செய்து, குடிப்பழி துடைத்துக் கோவலன் குற்றம் அற்றவன், களவாடக் கல்லாதவன் என்பதை உலகிற்கு உணர்த்துவதே தன் முன்னிற்கும் முதற்பெரும் கடமை என்பதை உணர்ந்தாள். அதனால், கணவன் மறைவு கேட்ட அக்கணமே உயிர்துறந்துவிடாது, மன்னன்முன் வழக்காடிக் கோவலன் குற்றமிலான் என்பதையும் நிலைநாட்டி, ஆராய்ந்து முறைசெய்ய மறந்த குற்றத் திற்காக மன்னன் உயிர்குடித்தும், மாநகர் எரியூட்டியும் அரச முறையையும் காத்து, பின்னர்க் கணவனோடு இரண்டறக் கலந்து, "தகைசான்ற சொற்காத்தல்” என வள்ளுவர் வகுத்த இலக்கணத்திற்கு நல்ல இலக்கிய மாகிச் சிறப்புற்றாள். கண்ணகியின் இப்பெருஞ் செயலை மாதவி, - -

"கணவற் குற்ற கடுந்துயர் பொறாஅள்

மணமலி கூந்தல், சிறுபுறம் புதைப்ப

காவலன் பேருர் கனையெரி மூட்டிய மாபெரும் பத்தினி” .

- மணி. 2 : 50-55.

- எனப் பாராட்டுவதும் அறிக.

இவ்வகையால், கண்ணகி, மனையற மாட்சி மிக்க மாண்புடையளாயினாள் என்பது தெற்றென விளங்குவ தாயிற்று. . -