பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் 147

கொண்டு வெறுத்து ஒழித்த கண்ணகியின் கணவன் அன்புதான் என்னே! - -

கணவன் பிழைகண்டு ஒறுத்தல்

கணவன் மனைவியர் உறவுமுறை பற்றிய இலக்கியங்களாக, எண்ணிலா அகப் பாடல்கள் பாடிய புலவர் பெருமக்களோ, அவ்விலக்கியங்களுக்கு இலக்கணம் வகுத்தருளிய ஆசிரியர் தொல்காப்பியரோ, கணவன் மனைவியர் இருவருள், கணவன் எவ்வளவு தவறுகள் வேண்டுமாயினும் செய்யலாம்; மனைவிதான் சிறு பிழைதானும் செய்யக்கூடாது. அதுமட்டுமன்று; கணவன் எவ்வளவுதான் தவறு செய்யினும், அதுபற்றி அவனைக் கண்டிக்கும் உரிமை மனைவிக்குச் சிறிதும் இல்லை எனக் கூறினாரல்லர். மாறாக இருவருமே தவறு செய்யாதவராதல் வேண்டும்; குற்றத்தின் நீங்கிய குணக்குன்றுகளாதல் வேண்டும் என்றே விதி வகுத்தார்கள். அதுமட்டுமன்று: கணவன் தவறு செய்தால், அவனைக் கண்டித்துத் திருத்தும் உரிமை மனைவிக்கு முழுக்க முழுக்க உண்டு. ஆனால், அக் கண்டிப்பு, தாய், தன் மக்களைக் கண்டிக்கும் கண்டிப்பு போல் அன்பை அடிப்படையாகக் கொண்டதாதல் வேண்டும்; தாய் அடித்தால், அடித்த மறுகணமே அடித்த கையாலேயே அணைத்துக் கோடல் போல், பிழைகண்டு ஒறுக்கவும் வேண்டும்; அடுத்த நாழிகையே பேரன்பு சொரியவும் வேண்டும் என்றே விதி வகுத்தார்கள்.