பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 இ புலவர் கள். கோவிந்தன்

அதனால், "ஆருயிர்க்காதல! அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஒம்பலும், துறவோரைப் பேணலும், விருந்தினர்களை வரவேற்று உணவு அளித்தலும் ஆகிய இவைகள் இல்லறத்தார்க்கு ஒதிய தலையாய கடமைகளாகும்; இல்லறம், கணவன் மனைவியர் ஆகிய இருவரும் ஒன்று கலந்து இருந்து ஆற்றவேண்டிய அறநிலையாகும்; அதனால், நீ இல்லாமல் என்னால் இல்லறக் கடமைகளை ஆற்ற இயலாது போயிற்று இல்லற நெறி புகுந்தும், இல்லறக் கடமைகளை ஆற்ற முடியாமை கண்டு என் உள்ளம் நனிமிக நொந்தது; நொந்த உள்ளத்து உணர்ச்சிகளை எவ்வளவுதான் அடக்கினாலும், அவை தளைகளை மீறி முகத்தின் வழி வெளிப்படவே செய்தன; அதனால், என் முகத்தில் கவலைக்கோடுகள் நிலையாக இடம்பெற்று விட்டன. அம்முகத் தோற்றத்தோடு கூடிய என்னை, உன் தாயும் தந்தையும் காண நேரின், உன் பிரிவால் வருந்தும் அவர்கள் மேலும் வருந்துவரே என்பதால், அவர் கண்களில் படாமல் ஒளிந்தே வாழ்ந்து வந்தேன்; ஆனால், எதிர்பாரா வகையில், ஒரோவழி என்னைக் காண நேரும் போதெல்லாம், உன் கொடுமைகளை யெல்லாம் பொருட் படுத்தாமல் வாழும் என் பொறுமையை அளவிற்கு மீறி அவர்கள் புகழத் தலைப்படுவார்கள்; அந்நிலையில், என் அகத்தே அடக்கி வைத்திருக்கும் நோயும் துன்பமும், புறத்தே வெளிப்பட்டு என் துயர் நிலையை அவர்களுக்குக் காட்டிக் கொடுத்துவிடுமோ என்ற அச்சத்தால்,