பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 இ புலவர் கா. கோவிந்தன்

பூவும் புகையும் புனைசாந்தும் கண்ணியும் நீடு நீர் வையை நெடுமால் அடி ஏத்தத் துரவித் துறைபடியப் போயினாள்" என்ற தொடர், திருமால் போலும் பெருந்தெய்வங்களை மலர் தூவியும், புகழ்பாடிக் குரவையாடியும் கும்பிடல் வேண்டும் என்பதை உணர்ந்திருந்தாள் மாதரி என்பதையும் உணர்த்துவது காண்க. கவுந்தியின் தாள் பணிதலோடு அவள் இடும் ஆணையைத் தலைமேல் தாங்கி நிறைவேற்றுவதே அவள்போலும் நடமாடும் தெய்வங்களுக்கு ஆற்றும் வழிபாட்டு முறையாகும் என்பதையும் அறிந்திருந்தாள் மாதரி.

"முற்றிலும் குணமே உடையவரோ, முற்றிலும் குற்றமே உடையவரோ உலகத்தில் அரியர். குணம் உடையவர்.பாலும் குற்றம் சிறிது இருத்தல் கூடும்; குற்றம் உடையவர்பாலும் குணம் சிறிது இருத்தல் கூடும். இதுவே உலகியலாதலின், நற்பண்புமிக்க மாதரி பாலும் சிறிது குற்றம் இருத்தல் கூடுமோ?” என்ற எண்ணம் எழக் கூடும். அந்நினைப்பிற்கே இடம் இல்லை என்று கூறுகிறார் கவுந்தி அடிகளார். மாதரி நல்ல பல பண்புகளைப் பெற்றிருந்ததோடு தீமையே அறியாதவள் என்றும் கூறுகிறார் அவர்.

மேலும், "நன்று நல்லது தீது பகுத்துணரமாட்டா இளம்பருவத்தள் மாதரி, அதனால், அவள் அத்தகைய நல்லவளாக இப்போதுள்ளாள்; அவ்வேறுபாடுணரும் பருவத்தளாய் வளர்ந்துவிட்டால், அப்போது அவள் பால் இந்நலங்களைக் காணல் அரிதாகி விடலும்