பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் 35


கூடும்” என நினைப்பதற்கும் இடமில்லாதபடி, மாதரி, நல்லது தீது உணரமாட்டா இளம் பருவத்தாள் அல்லள்; அவற்றை நன்கு உணர்ந்த முதியவளாவள் என்று கூறிப் பாராட்டியுள்ளார் கவுந்தி அடிகளார்.

"நன்று தீது உணரும் மூதறிவும் முதுமையும் உடையவள் என்பதினாலேயே, மாதரி நல்லவளாகி விடாள். நல்லது என்பதை உணர்ந்திருந்தும் அது செய்யாதவரும், தீது என்பதை உணர்ந்திருந்தும் அதையே விரும்பிச் செய்பவரும் உலகில் மிகப் பலர் ஆவர். மாதரி அத்தகையாருள் ஒருத்தியாதலும் கூடும்" எனக் கூறத் துணிவார்க்கும் வாய்ப்பில்லா வகையில், "மாதரி, நல்லது எனத் தன் உள்ளம் உணர்ந்த வழிச் செல்வதாயின் உயிர் இழக்கும் கேடே வரும் எனினும், அந்நல்லதைக் கைவிடாமையும், தீது உணர்ந்ததன் வழி நடப்பதாயின. பெருவாழ்வு பெறலாகும் என்ப தாயினும், அதைக் கனவினும் கருதாமையும் ஆகிய நடுவு நிலைமையில் உறுதியாக நிற்கும் உள்ளுரம் வாய்க்கப் பெற்றவளாவள்” என்கிறார் கவுந்தி அடிகளார்.

"அவ்வாறு, அறத்தை நிலைநாட்டுவதும், மறத்தைக் களைந்து போக்குவதுமாகிய அச்செயலை மேற்கொள்ளும் ஆர்வமிகுதியால், அன்பையும் அருளையும் மறந்து ஆற்றவும் கொடியவளாகி விடுவாளோ" என ஐயுறுவதற்கும் இடம் இல்லாதவாறு, மாதரி உள்ளம் அருள் நிரம்பிய உள்ளமாம் என்றும் கூறியுள்ளார் கவுந்தி அடிகளார்.