பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஒ. புலவர் கா. கோவிந்தன்

செய்து கொள்ளவோ, வெண் திங்களின் தண்ணொளி கண்டு மனம் களிக்கவோ விரும்பாத கண்ணகி, வேனிற் காலத்துத் திங்கள் ஒளிசொரியவும், மலயத் தென்றல் மெல்லென வந்து வீசவும் பொறாது நடுங்கும் கொடுமை கண்டு தம் உள்ளம் பெருமூச்செறிந்து அடங்குவதை, "நிலமகள் அயா உயிர்த்து அடங்கிய பின்னர்” என நிலமகள் மீது ஏற்றிக் கூறுமுகத்தான் அமைதிகாண முயன்றுள்ளார் இளங்கோவடிகளார்.

அம்மட்டோ! தன் கணவன் உயிர் போக்கித் தன்னைக் கைம்பெண்ணாக்கப் போகும் மாநகராகும் அம்மதுரைமாநகர் என்பதைக் கண்ணகி அறியாள் எனினும், அதைத் தாம் அறிந்துகொண்ட காரணத் தால், அஃதறியாது அம் மாநகருள் அடியிடும் அவள் நிலைக்கு இரங்கித் தம் கண்கள் நீர்மல்க, அக் கண்ணிரை அவள் காணின் கலங்குவளே என்பதால், அக்கண்ணிர் புலப்படாவாறு தம்மேனியைத் துவராடையால் போர்த்திக்கொள்ளும் அடிகளார், தம் செயலை,

"வையை என்ற பொய்யாக் குலக்கொடி,

தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல் புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக் கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப், புனல்யாறு அன்று இது, பூம்புனல் யாறு என."

- சிலம்பு. 13 : 170-174

வையை ஆற்றின்மீது ஏற்றிக் கூறியுள்ளார்.