பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 90 சரித்திரத்திற்கும் மிக அதிகமான பொருத்தமிருக்கிறது. மேலும், இராமநாதபுர ராஜ்யத்திலிருந்து இறுதியாகச் சிவகங்கைச் சீமை பிரிந்து தனி அரசாக உருக் கொண்ட தேதியை அறிவதற்குரிய மதிப்புடைய சாசனமாகவும் இது விளங்குகிறது...' இதுவே மதுரை நாடு' என்ற பெயரால் அறிஞர் நெல்ஸன் எழுதியுள்ள நூலில் கூறியுள்ள சாசனச் செய்தி. இச்சாசனச் செய்தியைச் சிவகங்கைச் சரித்திரச் கும்மியும் ஆதரிக்கிறது.' சிவகங்கை அரசின் முதல் மன்னராகிய சசிவர்ணரைப் பற்றியே வேறு ஒரு வரலாற்றுக் குறிப்பும் கிடைக்கிறது. விஜய இரகுநாதத் தேவரின் குறுகியகால ஆட்சியில் இணையில்லாச் செல்வாக்குப் பெற்ற குறுநிலத் தலைவர்களுள் ஒருவர், நாலுகோட்டை உடையத் தேவர் ஆவர். அவர் விஜய இரகுநாதரின் மனங்கவர்ந்த பெருமகனாராய் விளங்கினார். விஜய இரகுநாதர் தம்மேல் வைத்திருந்த அளவிலா அன்பையும் மதிப்பையும் பயன்படுத்திக் கொண்டநாலு கோட்டை உடையத் தேவர், தம் மைந்தராகிய சசிவர்ணருக்குச் சேதுபதியின் காதற்கிழத்தி மகளான அகிலாண்டேசுவரி நாச்சியாரைத் திருமணம் செய்து முடித்தார். இத்திருமணம் வாயிலாகச் சசிவர்னர் தம் மனைவி சீதனமாகக் கொண்டு வந்த பெருஞ்செல்வம் அத்தனைக்கும் உரியவராயினர். இவ்வுண்மையைச் சரித்திரமும் இலக்கியமும் மறைவின்றிச் சாற்றுகின்றன." மறவர் சீமை வெட்டொன்று துண்டு இரண்டாகி, இராமநாதபுரப் பகுதி பெரிய வாடகை என்றும் சிவகங்கைச்சீமை சின்ன வாடகை என்றும் வழங்கப்பெற்றன. பெரிய மறவர் நாடு, சிறிய மறவர் நாடு என்றும் அப்பகுதிகளை முறையே சுட்டலாயினர்; சிறிய மறவர் நாட்டை நாலு கோட்டைச் சீமை என்றும் குறிப்பிடுவர். மருதிருவரால் பின்னாளில் அழியாப்புகழ் அடைந்த சிவகங்கைச் சீமை தோன்றிய வரலாறு இதுவேயாகும். இந்நிகழ்ச்சி நடைபெற்றது 1730-ஆம் ஆண்டில். இதற்குச்சரியாக ஐம்பது ஆண்டுகட்குப் பின்னே நாம் ஆராய இருக்கும் மாணிக்கங்களின்-மாவீரர்களின்-ஆட்சி உதயமாகியது. இடைப்பட்ட இந்த அரை நூற்றாண்டில் மறவர் சீமையில் தமிழகத்தில் நடைபெற்ற சரித்திர நிகழ்ச்சிகளையும், அவற்றிற்கு அடிப்படையாய் இருந்த வரலாற்றுக் காரணங்களையும் நாம் ஒருவாறு தெரிந்து கொள்ள வேண்டுமன்றோ?