பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 18 கமண்டலம் ஆகிய இவற்றிற்குள் ஒளித்து வைத்திருந்த கொலை வாளும், சுருள் வாளும், குத்தீட்டியும், கைத்துப்பாக்கியும், இன்ன பிற கொலைக் கருவிகளும் இருள் கிழித்து எங்கும் மின்னின. எல்லோரும் ஒருங்கு சேர்ந்தனர். ஒரே நேரத்தில் பாளையங்கோட்டைச் சிறை காவலர்களைத் தாக்கினர்; வழிமறித்து எதிர்த்த காவலரை சிப்பாய்களை வெட்டி வீழ்த்தினார்கள்; அவர்களிடமிருந்த ஆயுதங்களை எல்லாம் கைப்பற்றினார்கள். சிறையில் இருந்த ஊமைத்துரையும் மற்றத் தோழர்களும் சிறைக்கு வெளியே வீரர் பட்டாளம் வீரிட்டு எழுந்து தலை வாயிற்கதவுகளைப் புறத்தேயிருந்து தாக்குவது அறிந்து, உள்ளேயிருந்து மோதினார்கள். சிறைக்கதவுகள் தகர்ந்து வீழ்ந்தன. வெள்ளம் போலத் திரண்டிருந்த வீரர் படை, ஊமைத்துரையையும் அவன் தோழர்களையும் தோள்மீதும் தலைமீதும் துக்கிக் கொண்டு, வீரபாண்டியர் வாழ்க! வெள்ளையர் ஆதிக்கம் வீழ்க' என்று முழங்கிய வண்ணம் தன் அருமைப் பாஞ்சாலங்குறிச்சியை நோக்கிக் காற்றாய்ப் பறந்தது. புரட்சி வீரர்கள் அவ்வாறு ஓடி வரும் வழியில் திடீரெனத் தங்கட்கு எதிர்ப்பட்ட நூறு பேர் கம்பெனிச்சிப்பாய்களைத்தாக்கி, அவர்களிடமிருந்த ஆயுதங்களை ஒன்று விடாமல் கைப்பற்றினார்கள். பின்னர் ஒட்டமும் நடையுமாய் முப்பது மைல் தொலைவையும் கடந்து சென்று, பாஞ்சைப்பதிக்குப் பக்கத்திலுள்ளதும், பின்னாளில் கப்பலோட்டிய வீரத்தமிழர் வ.உ.சி. பிறந்த இடமுமான ஒட்டப்பிடாரத்தில் தங்கி இளைப்பாறினார்கள். அவ்வீரர்கள் உள்ளம் கொல்லன் உலை போலக் கொதித்துக் கொண்டிருந்தது. அருமைப் பாஞ்சாலங் குறிச்சிக் கோட்டை தரை மட்டமாக்கப்பட்ட அவமானத்தை அவர்கள் எண்ணினார்கள்; தங்கள் தந்தையாய்த் தாயாய்த் தெய்வமாய் விளங்கிய வீரபாண்டியன் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டகொடுமையை நினைத்தார்கள். அவர்கள் நெஞ்சம், வெடிக்க இருக்கும் எரிமலை வீரிட்டுக் குமுறுவது போன்றிருந்தது. அவர்கள் உதடுகளைக் கடித்துக் கொண்டார்கள். உயிரை விட்டேனும் கம்பெனிப் படைகளை ஊமைத்துரையின் தலைமையில் போரிட்டு நாசமாக்குவது என்று உறுதி கொண்டார்கள். பொழுது புலர்ந்தது. புரட்சி வீரர்கள் இரவு தாங்கள் வகுத்த திட்டங்களை எல்லாம் உருவாக்கத் தீவிரமாக முனைந்தார்கள். அதற்குள் பாளையங்கோட்டைச்சிறை தகர்ந்ததையும், புரட்சி வீரர்கள் தப்பியதையும் அறிந்த மக்காலே துரை, சங்கரநயினார் கோவிலிலிருந்த சிப்பாய்களைக் கயத்தாற்றிற்குச் சென்று அங்கிருந்து ஆர்க்காட்டு நவாபுவின் குதிரைப்படையோடு சேர்ந்து குலையநல்லூர் போகுமாறு கட்டளையிட்டான்.