பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 பேராசிரியர் ந.சஞ்சீவி என்ற கவிதையைக் கூறினார். செவி கைப்பச் சொற் பொறுக்கும் பண்பமைந்த மருது பாண்டியன், தன் நாட்டின் நிலையெண்ணி மனம் நைந்ததோடு, புலவர்க்கு வேண்டுவன எல்லாம் தந்து, ஆறு பவுன்தங்கத்தில் தாலியும் செய்வித்து, அதைப் புலவர் கையில் கொடுத்து, அவர் மனைவியார் கழுத்தில் அதைக் கட்டி மகிழச் செய்தான். நொந்து வந்த புலவர் உள்ளம் குளிர்ந்தது அவர் இதயம் இன்பக் கடலாயிற்று. தாலிக்கு வேலி தமிழுக் குதவிய தார்மன்னனே! என்று அவர் வாயார அவ்வள்ளலை வாழ்த்திச் சென்றார். இவ்வாறே கள்ளர் வகுப்பைச் சேர்ந்த புதுக்கோட்டை மன்னன் தந்த பொருளைப் பெற்று வரும் வழியில் கள்ளர்களிடம் அப்பொருளைப் பறிகொடுத்த பைந்தமிழ்ப் புலவர் ஒருவர், அதையறிந்து வருந்திய தம் மனைவியாரது மனக்கலக்கம் தீரும் வகையில், 'கள்ளன் கொடுத்ததைக் கள்ளன் எடுத்தகன்றான்! உள்ளம் கடுத்தால் உறலாமோ? - வள்ளல் மருதரசன் உள்ளான் மடவாய்! வறுமை ஒருவ அருள்வான் உடன்.' எனச் சொற்பொருள் அழகமையப் பாடிய தமிழ்ப் பாடலில் புலவரையெல்லாம் போற்றிய மருது பாண்டியரது புகழ் விளங்குகிறதன்றோ! இவ்வாறு அலந்தோர்க்கும் அருந்தமிழ்ப் புலவோர்க்கும் புகலிடமாய்த் திகழ்ந்த மருதுபாண்டியர் உண்மையான தேச பத்தியையும் தெய்வ பத்தியையுமே தம் இரு கண்களாகப் போற்றி வாழ்ந்தனர். இத்தகைய பண்பாடு நிறைந்த உள்ளம் படைத்த அவ்விரு பெருந்தமிழ் வீரர்களும் தமிழகத்தின் மானத்தைக் காக்க நிகழ்த்திய விடுதலைப் போர், வீரச்சுவை நிறைந்த விழுமிய போராகும். அப்போரில் அவ்வீரர்களும் அவர்களைப் பின்பற்றிய பல்லாயிரக்கணக்கான மறவர்களும் குடும்பம் குடும்பமாகச் செய்த தியாக வரலாறு கற்பார் கண்கட்கு வீர ஒளியையும் உள்ளத்திற்கு விடுதலை உணர்ச்சியையும் ஊட்ட வல்லதாகும். இத்தகைய தமிழ் மறவராகிய மானங்காத்த மருது பாண்டியரது தீரமும் தியாகமும் நிறைந்து விளங்கும் விடுதலைப் போராட்டத்தின் வீரச் சுவை மலிந்த வரலாற்றை இனிக் காண்போம்.