பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


நெடுஞ்சாலைத்துறையில் ஒரு மாத காலத்திற்குள்ளாக சாதாரண மக்களைத் தொடக்கூடிய காரியம் எவ்வளவு செய்திருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையில் கேங் மஸ்தூர் என்று பணியாற்றக் கூடியவர்கள் 11,685 பேர். இவர்களில் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்துள்ள 6,700 நபர்கள் நிரந்தரமாக்கப் பட்டுள்ளார்கள். இதற்காக அரசுக்கு ஆகும் கூடுதல் செலவு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 17 லட்சமாகும்.

பொதுப்பணித் துறையில் ஒர்க் சார்ஜ்டு தொழிலாளர்கள் மொத்தம் 8,000 பேர் இருக்கிறார்கள். இவர்களில் 7,000 பேர் நிரந்தரமாக்கப்பட்டுள்ளார்கள். பொதுப்பணித் துறையிலும், நெடுஞ்சாலைத் துறையிலும் தற்போது 13,700 பேர் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆலயப் பணியாளர் 50,000 பேருக்கு ஊதிய விகிதங்கள் சீரமைக்கப்பட்டிருக்கின்றன. 50,000 குடும்பங்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் அறிவார்கள்.

இன்னும் சில புதிய அறிவிப்புகளை இந்த நிதி ஒதுக்கீட்டில் அறிவிப்பதன் மூலம் உறுப்பினர்களுக்கும், மற்றவர்களுக்கும் மகிழ்ச்சி தரும் என்று கருதுகிறேன்.

1972 ஏப்ரல் திங்கள் 1-ம் தேதியிலிருந்து குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 30லிருந்து ரூ.40ஆக உயர்த்தப்பட்டது. இத்தொகை குறைவாக இருக்கிறதென்று ஒரு குறைபாடு இருந்துவருகிறது. ஓய்வூதியம் பெறுபவர்களின் இந்தக் கோரிக்கையை மனதில் கொண்டு 1973 ஏப்ரல் திங்களுக்கான ஓய்வூதியத்திலிருந்து குறைந்தபட்ச ஓய்வு ஊதியம் ரூ.50 ஆக உயர்த்தப்படுகிறது. (ஆரவாரம்) ஆண்டு ஒன்றுக்கு இதனால் ரூ.30 லட்சம் அதிகச் செலவாகும். 30,000 பேர்கள் இதனால் பயனடைவர். 30,000 பேர் இந்த அரசை வாழ்த்துவார்கள், இந்த மாமன்றத்தை வாழ்த்துவார்கள்.