பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


உற்சாகப்படுத்தி, அதனுடைய பணியிலே வேகமாக நடப்பதற் கான தூண்டுகோலாக அமையும் என்றும் நான் நம்புகிறேன்.

குறிப்பாக வெள்ளம் ஏற்பட்ட நேரத்தில் இந்த அரசு எவ்வளவு துரிதமாக நடவடிக்கைகளை எடுத்தது என்பதைப் பற்றியும் விவசாயிகளின்பால் எவ்வளவு அக்கறையோடு நடந்துகொண்டது என்பதைப்பற்றியும், இதுவரையில் தமிழகத் திலே பரிபாலனம் செய்த எந்த அரசும் செய்ய முன்வராத காரியங்களை எல்லாம்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படிச் செய்ய முன்வந்தது என்பதைப்பற்றியும் நான் விளக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதிலும் குறிப்பாக, வெள்ளத்தின் காரணமாக தென்னாற் காடு, சேலம், கோவை, திருச்சி, தர்மபுரி, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கராக்கள் ஒரு அடி, இரண்டடி, மூன்றடி மண் தூர்ந்துபோய் அந்த நிலங்கள் சாகுபடிக்கு லாயக்கில்லாத நிலை உருவாயிற்று. அப்போது இந்த அரசு வேகமான நடவடிக்கைகளை எடுத்து 10,602 ஏக்கராவில், அந்த நிலங்களைத் தூர்வாரி, பழையபடி நல்ல கழனிகளாக மாற்றி, அரசே முழுச்செலவையும் தானே முன்வந்து ஏற்றுக்கொண்டு, விவசாயிகளுக்கு நன்மை செய்த முதல்தடவையான நிகழ்ச்சி, திராவிட முன்னேற்றக் கழக அரசினால்தான் நடைபெற்றிருக்கிறது என்பதை நான் மிக்க பெருமையோடு இங்கே தெரிவித்துக் கொள்வேன்.

இதற்கு முன்பு பல வயல்கள் வெள்ளத்தால் பாழ்பட்டுப் போனதுண்டு. அந்த வெள்ளத்தால் தங்கள் நிலங்களில் மூடப்பட்ட மண்ணை எடுக்க, முன்பெல்லாம் அந்தந்த விவசாயிகளே பொறுப்பேற்றுக் கொண்டார்கள். அதற்குமாறாக இப்போது 86 லட்சம் ரூபாய் செலவழித்து, அரசாங்கமே பத்தாயிரம் ஏக்கரா நிலத்தை தூர் எடுத்து, சீர்படுத்தி விவசாயி களுக்குக் கொடுத்த பெருமை இந்த அரசுக்கே உண்டு. அது மாத்திரம் அல்ல.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, லட்சக்கணக் கானவர்களுக்கு உதவிகளையும் நாம் செய்திருக்கிறோம்.