பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


இரண்டு நாளைக்கு முன்னாலேகூட, நானும் நாவலரும் கலந்துகொண்ட ஒரு கருத்தரங்கிலே, முன்னாள் தலைமை நீதிபதி சுப்பாராவ் அவர்கள் பேசுகிற நேரத்திலே, வெகு தெளி வாக, அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார்கள். இந்தியாவிலே நல்ல நிர்வாகமும், அமைதியும் நிறைந்த ஓரிரு மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக இருக்கிறது என்று பெருமையோடு சொன்னார்கள். ஒருவேளை சுப்பாராவ் சொன்னதை, இந்த மன்றத்திலே இருக்கிற மாற்றுக் கட்சிக்காரர்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம் ஆனால், எங்களுக்கு இப்படிப்பட்ட பாராட்டுக்கள், நல்லவர்களிடமிருந்து, சில நேரங்களில் கிடைப்பது ஒன்றுதான், எதிர்க்கட்சிக்காரர்களால் எங்களுக்கு உருவாக்கப்படுகிற எரிச்சலுக்கு மாமருந்தாக விளங்கி வருகிறது.

மாணவர்களைப்பற்றியெல்லாம் இங்கே பேசப்பட்டது. கிளைவ் ஹாஸ்டல் நீதி விசாரணை அறிக்கை, பாளையங் கோட்டை நீதிவிசாரணை அறிக்கை இவைகளைப் பற்றி யெல்லாம் மாணவர்கள் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. மாணவர்கள் நிலைக்காக நான் மெத்த வருத்தப் படுகிறேன் என்று நம்முடைய பெரியவர் மணலி கந்தசாமி அவர்கள் இங்கே எடுத்துக்கூறினார்கள்; அப்படிச் செய்வதால் தனக்கும் மாணவர்களால் ஆபத்து ஏற்படக்கூடும் என்று அச்சம் தெரிவித்து இருக்கிறார்கள். பெற்றோர் அணி உருவாக்கி மாணவர்களை நல்வழிப்படுத்தவேண்டுமென்று நம்முடைய முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் திரு.வகாப் அவர்கள் சொன்னார்கள்.

பெற்றோர்கள் மாணவர்களை எப்படிப்பட்ட வழியிலே நடத்திச்செல்ல வேண்டும் அல்லது ஆசிரியர்கள் மாணவர்களை எப்படி நடத்திச் செல்ல வேண்டும் என்பதைக் கவனிப்பதைவிட அரசியல்வாதிகள் மாணவர்களை எப்படி நடத்திச் செல்வது என்ற கருத்தை ஆராய்வது நல்லதாகும். ஒரு காலத்திலே காந்தியடிகள் போராட்டத்திலே இறங்க மாணவர்களை அழைத்தார்கள். இந்திய மண்ணின் சுதந்திரப் போராட்டம், விடுதலைப் போராட்டம் அது. அதற்குப் பிறகு தமிழகத்தைப் பொறுத்தளவிலே மொழிப் புரட்சியிலே மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.