பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

459


அதிலேயிருக்கிற குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினார்கள். நம்முடைய மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கிற அமைப்புகளில் எந்த அளவுக்கு நன்மைகள் விளையும் என்பதையெல்லாம் எடுத்துச்சொன்னார்கள். இந்தப் போக்குவரத்துக் கழகங்கள் தனியாக அமைக்கப்பட்டதும், இன்று போக்குவரத்துத் துறையிலே செய்யப்பட்டிருக்கிற ஏற்பாடுகளும், நம்முடைய பேருந்துகளை மேலும் செம்மையாக நடத்துவதற்கான வாய்ப்புகளை இந்த அரசுக்கு வழங்கியிருக்கிறது. பல போக்குவரத்துக் கழகங்கள் உருவாகியிருக்கின்றன. பல்லவன், பாண்டியன், சேரன், சோழன், அண்ணா, கட்டபொம்மன் என்ற பெயரில் போக்குவரத்துக் கழகங்கள் இன்றைக்கு உருவாக்கப்பட்டு நல்ல முறையிலே செயல்படுகின்றன.

மிச்சமிருக்கிற ஒரு பகுதி வட ஆற்காடு, தென்னாற்காடு பகுதி. அதற்கும் ஒரு போக்குவரத்துக் கழகம் உருவாக விருக்கிறது என்பதையும், அதற்குப் பெயர், தந்தை பெரியார் போக்குவரத்துக் கழகம் என்பதையும் தெரிவித்துக் கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். (ஆரவாரம்).

மேலும், பல்வேறு விவரங்கள் இந்தத் துணை மதிப்பீட்டில் எடுத்துச் சொல்லப்பட்டிருந்தாலும், அவைகளுக் கெல்லாம் தனித்தனியாகப் பதில் சொல்ல இயலாது எனினும் இங்கு பதிவாகியிருக்கிற குறிப்பேட்டிலிருந்து அரசின் அதிகாரிகள் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதன் மூலமாக, குறைகளைத் தீர்த்து வைப்பார்கள் என்பதை மாத்திரம் கூறி, இந்த நேரத்தில் நல்ல கருத்துக்களை வழங்கிய எல்லா உறுப்பினர் களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். வணக்கம்.