பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

461


பெறவும் இம் மானியத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ ஆறு இலட்சம் பேர்களுக்கு நாளொன்றுக்கு வேலையளிக்கும் வண்ணம் இப்பணிகள் தற்போது முனைப்பாக செயல்பட்டு வருகின்றன.

சமுதாயத்தில் எளிய நிலையிலும் நடுத்தர நிலையிலும் உள்ளவர்களுக்கு சீரான விலைகளில் உணவுப்பொருட்கள் கிடைக்கச் செய்வதற்காக நாம் மேற்கொண்டுள்ள கொள்முதல் முயற்சிகளுக்கென தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கு நிறுவனத்திற்கு 15 கோடி ரூபாய் கடனும் நாற்பத்திரண்டு கூட்டுறவு விற்பனைச் சங்கங்களுக்கு மொத்தமாக ஒரு கோடி ரூபாய்க் கடனும் தருவதற்கு இந்த மதிப்பீடுகளில் 56-ஆவது மானியக் கோரிக்கை வழி செய்கிறது. உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வது தணிக்கைச் சாவடிகள் அமைப்பது போன்ற தொடர்புடைய செலவுகள் மொத்தம் 86 இலட்சம் ரூபாய் 34-ஆவது மானியக் கோரிக்கையில் அடங்கும்.

வறட்சியின் விளைவாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடும் பரப்பு குறைந்ததனால், வரும் பருவத்துக்கு வேண்டிய விதைகளை வேளாண்மைத் துறையினர் விலைக்கு வாங்கி விற்பது மிகவும் அவசியமானதாகும். இதற்கென 1.43 கோடி ரூபாய் செலவுக்கு மன்றத்தின் ஒப்புதலை 20-ஆவது மானியத்தின் மூலம் பெற விழைகிறேன். மத்திய அரசு நமக்கு உரம் ஒதுக்கி வருகின்றது. இந்த ஆண்டு இதற்கான விலை உயர்ந்துள்ளதற்காக 9.49 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கும் இந்தத் துணை மானியக் கோரிக்கைகளில் வகை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு இதற்கான தகவல்களை அனுப்பியவுடன் மாநிலக் கணக்கு ஆய்வாளர் அரசின் கணக்கில் பற்றுவைப்பதற்கு ஏற்ற நிதி ஒதுக்கமாக இது அமையும்.

வறட்சிப் பகுதிகளில் விரைந்து வேலைவாய்ப்புத் தருவதற்காக இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இராமநாதபுரம் கண்மாய், இராஜசிங்கமங்கலம் கண்மாய், திருப்பத்தூர் கண்மாய், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கவினாடு கண்மாய் ஆகிய நான்கு பெரிய கண்மாய்களைத் தூரெடுத்துச் சீரமைக்கும் பணிகளுக்காக ஒரு கோடி ரூபாயும், குளித்தலை வட்டத்தில் கண்ணூத்து ஓடைத் திட்டத்தை மேற்கொள்வதற்காக 20 இலட்சம் ரூபாய் செலவிட வகை செய்துள்ளோம்.