பக்கம்:மாபாரதம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

97

தருவதாக உறுதி தந்தான். அதற்காக விடபருவன் என்னும் அசுரன் கொள்ளையடித்துக் குவித்து வைத்த அரிய மணிகளைக் கொண்டு வந்து சேர்க்கும்படி கூறினான். அவை விந்து என்னும் பொய்கையில் குவிந்து கிடப்பதாகவும் கூறினான்.

கண்ணசைவில் விண்ணையே அசைத்துக் கொண்டு வரும் ஆற்றல் உடைய தம்பியர் இளைஞர் காவலன் கட்டளை கேட்டுச் சொல்லிய மணிகளை அள்ளிக் கொண்டு வந்து சேர்த்தனர். மயன் தன் சிற்ப நூல் புலமையால் திறன்மிகு பணியாளர்களைக் கொண்டு மின்னல் என ஒளி விடும் முகில் தவழும் மண்டபம் அமைத்துக் கொடுத்தான். கட்டித் தங்கத்தால் கற்களை அடுக்கிக் கணக மணிகளால் விதானம் ஏற்றிப் பச்சை மரகதத்தால் தூண்கள் போக்கி விண்ணவர் உலகத்து சுதன்மை என்னும் மண்டபத்திலும் சிறந்தது என்னும்படி அமைத்துக் கொடுத்தான். நகரம் விழாக்கோலம் கொண்டது.

மண்டபம் அமைத்ததும் அதனை விருப்புற்றுக் காண விண்ணவர் வந்து குழுமினர்; மாமன்னர்கள் வரவேற்கப் பட்டனர்; வித்தியாதரர் வந்து வியந்தனர்; இந்திர உலகத்து அத்தாணி மண்டபம் போல் காட்சி அளித்த அதனைக் கண்டு இஃது ஒர் அரிய சாதனை எனப் பாராட்டினர்

கட்டி முடித்ததும் புதுமனை புகுவிழா நடத்தினர். அதற்கு வருகை தந்த நாரத முனிவன் அவர்கள் மனம் குளிர நற் செய்தி நவில வந்தான். தருமனின் தந்தை பாண்டு மாண்டு ஆண்டுகள் சில ஆகி விண்ணவருலகில் மண்ணுலகக் காட்சிகளைக் கேட்டு மகிழ்ந்தவனாய்த் தன் மகன் ஓர் இராசசூய யாகம் நடத்திப் பெரும் புகழ்படைக்க

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/100&oldid=1036104" இலிருந்து மீள்விக்கப்பட்டது