பக்கம்:மாபாரதம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

மாபாரதம்

என்பவன் பிள்ளை வரம் வேண்டிப் பெரு முனிவன் கவுசிகனிடம் சென்று தன் கொள்ளை ஆசையைக் கூறினான். பிள்ளைக் கனி அமுதம் பெற அம்முனிவன் இனிய தீஞ் சுவைக் கனியாகிய மாம்பழம் ஒன்று தந்து தான் விரும்பும் மங்கைக்குக் கொடுக்குமாறு கூறினான். ஆசைக்கு உரிய நேசமும் பாசமும் உள்ள பத்தினியர் இருவருக்கும் பாதி பாதியாகப் பகிர்ந்து அளித்தான். அவர்கள் கரு உயிர்த்து உருவளித்த குழந்தையும் பப்பாதி வடிவம் பெற்றுப் பாரி னில் உதித்தது. இது அரை குறை பிறப்பு எனக் கருதி விடியுமுன் அதை ஊர்ச் சுவரைக் கடந்து அரசன் தூக்கி எறிந்தான். பிணம் தின்று நிணம் வளர்க்கும் நிசிசரியாகிய அரக்கி ஒருத்தி ஆசையுடன் எடுத்து அவற்றைப் பொருத்திப் பார்த்தாள். அவை ஒட்டிக் கொண்டன; உயிர்ப்புப் பெற்றுத் தன்னை வாழவிடு என்று வாதிடுவது போல வாய்விட்டு அரற்றியது.

அது மன்னன் மகன் என்பதால் அவ்வரக்கி அதனிடம் இரக்கமும் மதிப்பும் வைத்து அக்குழந்தையை அவ் அரசனிடம் சேர்ப்பித்து அதற்குச் சராசந்தன் என்று பெயரிடு மாறு சொல்லிச் சென்றது. சரை என்ற அரக்கி சந்து செய்வித்ததால் அக்குழந்தைக்குச் சராசந்தன் என்ற பெயர் அமைந்தது: அரக்கி தொட்ட பிள்ளையாதலின் அது இரக்கம் கெட்ட அரக்கனாக மாறித் துட்டன் என்று பெயர் எடுத்தது. அரச மகனாகியும் அசுர இயல்பு கொண்டு உலகை அவன் ஆட்டிப்படைத்தான். அவன் நிலத்துக்குச் சுமையாக விளங்கியமையால் அவனைக் குமைத்து ஒதுக்குவது தக்கது என்று துளப மாலையன் ஆகிய முகுந்தன் விவரித்து உரைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/103&oldid=1036107" இலிருந்து மீள்விக்கப்பட்டது