பக்கம்:மாபாரதம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

103

சம்பிரதாயம் மீறிய வாழ்க்கை ஆக இருந்தது; மறுபடிபும் மானிட சமுதாய சம்பிரதாயங்களின் கட்டுக்குள் அவர் கள் கொண்டு வரப்பட்டனர். இதற்கு வியாசன் வருகை ஒரு திருப்பு நிலை ஏற்படுத்தியது.

யாக வேள்வி நடத்தும் இப்பெருவிழாவில் முதல் மரியாதை பெறுவதற்கு உரியவர் யார் என்ற வினா எழுப்பப்பட்டது. விழாவினை முன்னின்று நடத்தப் பூசனைக்குரிய அலைத் தலைமைக்கு யார் தகுதி பெறுகின்றனர் என்ற வினா எழுப்பப்பட்டது. குடும்பத்தின் மூத்த மகனாகிய வீடுமன் எழுந்து தலைமைப் பதவிக்கும், மதிப்புக்கும், மரியாதைக்கும், வழிபாட்டுக்கும் உரியவன் கண்ணனே என்று முன் மொழிந்து கூறினான். அதற்கு எதிர்ப்பு என்பது எழவில்லை. அந்நிலையில் அவை யோரின் அடக்கத்தைக் கண்டு ஆவேசம் கொண்ட சேது என்னும் நாட்டுக்கு அதிபதி ஆகிய சிசுபாலன் சீற்றம் கொண்டான். கண்ணனுக்கு ஏற்றம் தர மறுத்தான்.

“மன்னவர் கூடியிருக்கும் இம் மாமண்டபத்தில் பால் மணம் மாறாத கோபாலன் எப்படித் தகுதி பெறுகிறான்” என்ற வினா எழுப்பினான். சாதி அரசியலை அடிப்படையில் வைத்து நீதி கேட்டான். இடையன்; ஒருவன் எப்படி முதல்வன் ஆக முடியும் என்று கேட்டான்; மாடு மேய்க்கும் குலத்தில் பிறந்து ‘கோனார்’ என்ற பெயரைப் பெறுவதாலேயே அவன் “கோன்” ஆக எப்படி ஆக முடியும்? கோபாலன் எப்படிப் பூபாலன் ஆகலாம்?” என்று கேட்டான். “கோபியரை அவன் குழல் ஊதி மயக்கலாம்; பாபியரைத் தான் பரமன் என்று கூறிப் பெருமைப்பட வணங்கச் செய்யலாம். கோவியல் படைத்த கோவேந்தரை அவன் நா இயல் மயக்க முடியாது. எத்தகுதி பற்றி இக் கிழட்டுத் தலைவன் அவன் பெயரை எடுத்து ஒதினான்” என்று கேட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/106&oldid=1048182" இலிருந்து மீள்விக்கப்பட்டது