பக்கம்:மாபாரதம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

மாபாரதம்


அறிவும் சால்பும் மிக்க கண்ணன் பொறுமைக்கு ஓர் வரம்பாக அன்று நடந்து கொண்டான்; நூலில் அச்சுப் பிழை பொறுக்கும் வாசகர்களைப் போல அவன் நச்சுச் சொற்களைப் பொறுத்துக் கொண்டான். நூறு பிழை செய்தாலும் நூலோர் பொறுமை காட்டுதல் அவர் இயல்பு என்பதற்கேற்ப அவன் பேசுவதைத் தடுக்கவில்லை; ஏசுவதிலும் ஒரு கலை இருக்கிறது என்பதை ரசிப்பவன் போல அவனைத் தடை செய்யவில்லை. திட்டுவதில் அவன் எட்டும் உயரம் காண விழைந்தான். நூல் அறுந்த காற்றாடி உயரப் பறந்தது.

கண்ணன் மீது அவன் தொடர்ந்து குற்றங்கள் சாற்றி னான்.

யானை கொழுத்தால் தானே தன் மீது புழுதியைத் தூற்றிக்கொள்ளும் என்பர். இவன் மற்றவர் மீது புழுதி வாரி இறைத்தான்.

அவன் கூறிய வசை மொழிகள்

“பிறந்தது எட்டாவது; அதனாலேயே அவன் பிற்பட்டவன் ஆகிறான். இவனுக்கு முன் பிறந்தவர்களை வாழ வைக்காமல் வெட்டுக்கு இரையாக்கிக் கட்டோடு சாக வழி செய்தான். இவன் பிறப்பே அவல வரலாறு கொண்டது.”

“இவன் பிறந்தது மாளிகை அல்ல; பசுவின் கொட்டிலாக இருந்தாலும் இவனைப் பரமன் என்று கூறலாம். அதுவும் இல்லை. கம்சனின் சிறைக்கட்டில் பிறந்தவன்; சிறையில் பிறந்தவன் குற்றவாளிதானே; தாயையும் தந்தையையும் கண் திறந்து கண்டதும் சிறையில்தானே"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/107&oldid=1036112" இலிருந்து மீள்விக்கப்பட்டது