பக்கம்:மாபாரதம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

மாபாரதம்


“சிசுபாலன் பிறக்கும் போது மூன்று கண்களும் நான்கு கைகளுமாகப் பிறந்தான். அவன் தாய்க்கு அது கவலையாகி விட்டது. தெய்வங்களுக்குத்தான் இந்த மிகைப்பட்ட அவயங்கள் அமைதல் உண்டு. மானுடம் ஆயிற்றே: அவன் எப்படி வாழ்வான் என்ற கவலை வாட்டியது. அவயக் குறைவு ஏற்படலாம்; மிகுதியைத் தாங்கிக் கொள்ள முடியாது. ஐங்கரன், நான்முகன், யானைமுகன், ஆறுமுகன் முக்கண்ணன் இவர்கள் மானிடப் பிறவிகள் அல்லர்; பாவம்! தெய்வங்கள் எவ்வாறு தொல்லைப் பட்டிருப்பார்கள்; புகழ்ச்சி என்று பேசுவது சுமையாக அமைந்துவிடுகின்றது.”

“சிசுபாலன் கண்ணனின் அத்தை மகன் என்பதால் அவனை ஆசையோடு மடி மீது வைத்துக் கொண்டான். அவன் விகார வடிவம் நீங்கி சுவீகாரம் கொள்ளத்தக்க அழகனாக மாறினான்.”

“அதற்கு முன் அசரீரி சொல்லி இருந்தது. எவன் அவனை எடுக்கிறானோ எவன் அணைப்பால் விகார வடிவம் மாறுகிறதோ அவன் கையால்தான் அவனுக்கு மரணமும் நேரும் என்று தெரிவித்திருந்தது.”

“கண்ணன்தான் அவனுக்கு இயமனாக மாறுவான் என்பது அறிந்து அவன் அன்னைக்கு மனநிறைவு ஏற்பட்டது. கெஞ்சி முறையிட்டு அவனைக் கொல்லாமல் இருக்கக் கேட்டுக் கொண்டாள்.”

“கண்ணா! அவனை நூறுபிழை செய்தாலும் மன்னிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.”

“கண்ணனும் நூறு பிழை செய்தால் பொறுத்துக் கொள்வதாக வாக்குறுதி தந்திருக்கிறான். அதனால் தான் இந்தப் பொறுமை” என்று கூறப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/113&oldid=1036555" இலிருந்து மீள்விக்கப்பட்டது