பக்கம்:மாபாரதம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

மாபாரதம்

கொடிகள் அங்கங்குப் பறந்து இவன் விரசு புகழ் முழங்க வேண்டுமா? என் தந்தை திருதராட்டிரன் செய்யாத பெரு வேள்வி இவன் செய்தால் என் தந்தைக்கு இழுக்கு அல்லவா? முரசுக் கொடி உயர்த்தி முரசு கொட்டி முழங்கலாம். அரவுயர்த்தவன் ஆகிய நான் நச்சுப்பல்லுடை யவன் என்பதை அவன் அறிய வேண்டாமா? அவன் கொட்டம் அடங்க நாம் செய்யும் திட்டம் என்ன?” என்று அவையோரைப் பார்த்துக் கேட்டான்.

இச்சகம் பேசி அதனால் இகபர சுகம் அடைய முடியும் என்ற நம்பிக்கை உடைய இளையவன் துச்சாதனன் எரியும் கொள்ளியினை ஏறவிடுவது போல அதற்கு இசைய வகை மொழிகளைப் பேசினான். முளைக்கும் போதே முள் மரத்தைக் களைவது எளிது; அது முறுக்கேறி விட்டால் கோடரிதான் தேவைப்படும் என்றான். நீர் என்றும், நிலம் என்றும் வேறுபாடு அறிய முடியாதபடி பளிக்குத்தரை அமைத்து அண்ணன் திகைத்தபோது அச்சிங்காரி நகைத்தாளே அதை நினைத்தாலே நெஞ்சு குமுறுகிறது. அணங்காகிய அவளுக்கு அடுப்பு ஊதிக் கொண்டிருந்த அந்த மடையன் வீமன் அந்தச் சிறுக்கி யோடு சேர்ந்து ‘சுளுக்கு’ என்று இளித்தானே இந்தக் கிறுக்குகளுக்கெல்லாம் ஒரு சுறுக்குக் காணாமல் எப்படி இருக்க முடியும். வந்தவர்களை வா என்று அழைத்தார்களே தவிர அங்கு இருந்தவர்களைச் சாப்பிட்டீர்களா என்று வினவினார்களா? எத்தனையோ பேர் வந்தார்கள். வந்தவர்களை வரவில் வைத்தான்: சென்றவர்களைச் செலவில் வைத்தானே தவிர இருப்பில் எங்கே வைத்தான் வேள்விக்கு முதல் மரியாதை பெறக் கேள்விக்கு உரிய இடையன் தான் கிடைத்தான்; தாத்தா:வீடுமன் இல்லையா? கல்வி கற்றுத்தந்த ஆசான் துரோணன் இல்லையா? ஆரம்ப ஆசிரியன் கிருபன் இல்லையா? மன்னன் மரபில் வந்த மகிபதிகள் இல்லையா? வீரன் அசுவத்தாமன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/117&oldid=1048185" இலிருந்து மீள்விக்கப்பட்டது