பக்கம்:மாபாரதம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

மாபாரதம்

நம் பெருமைக்கும் பொருந்தாது.” என்று கூறிப் பயணக் கட்டுரைக்குத் தாளும் கோலும் எடுத்து வைத்தான். அனைவரும் அத்தினாபுரி சேர்ந்தனர்.

குருட்டுத் தந்தை திருட்டுத்தனம் மிக்கவனாக நடந்து கொண்டான். அன்புடையவனைப்போல அகம் குழையப் பேசித் தழுவிக்கொண்டு தருமன் கட்டிய மண்டபத்தையும் நடத்திய வேள்வியையும் காணும் பேறு தனக்கு இல்லாமல் போய்விட்டது என்று வருந்துவது போலப் பேசி நடித்தான். அன்னை காந்தாரியைப் பார்த்துவிட்டுப் போகச் சொன்னான்; தருமன் அவளையும் பார்த்து இனிய உரை பேசி மகிழ்வித்தான்.

மாமன் சகுனியும், தம்பிமாரும், அங்கர் தம் அரசனும், வீடுமனும், விதுரனும், அசுவத்தாமனும், துரோணனும் கூடியிருந்த அரசவையில் வீற்றிருந்த துரியன் மண்டபத் தின் அழகு காண மன்னர் ஐவர் தம்மை நீ கொண்டு இமைப்பில் வருக” என்று தேரோட்டியாகிய பிராதிகாமி யைப் பணித்திட்டான்.

சென்றவன் எட்டுத்திக்கும் வென்றவனாகிய தருமனை வணங்கினான். வாய்புதைத்து அடக்கம் காட்டித் தன் உரையைத் தொடங்கினான். “மண்டபத்தின் அழகுகாண மன்னன் துரியன் அழைக்கின்றான்; வருக” என்று கூறினான்.

வேள்விச் செல்வியாகிய திரெளபதியைக் காந்தாரியின் இல்லில் இருக்கச் சொல்லிவிட்டுத் தானும் தம்பியும் பேய் இருந்தது என்னும்படி அமர்ந்திருந்த துரியனை அணுகினான்; அசையாத கொலுப்பொம்மைகள் போல் வீற்றிருந்த பெரியவர்களை வணங்கிவிட்டு மண்டபத்தைக் கண்டு வியந்து அதனை மனமாரப் பாராட்டினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/123&oldid=1036924" இலிருந்து மீள்விக்கப்பட்டது