பக்கம்:மாபாரதம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

121


“இந்த மண்டபத்துக்கு இணையாக விண்ணவர் நகரிலும் இருக்க முடியாது” என்று புகழ்ந்து கூறினான், தான் கட்டிய மண்டபத்தை விடவும் அழகிது என்று அடக்கத்தோடும் கூறினான். அவன்பின் வந்த தம்பியரும் முறைப்படி அவைப் பெரியோருக்கு வணக்கம் சொல்லிவிட்டு அவரவர்க்கு இட்டு இருந்த தவிசில் அமைதியாக அமர்ந்து கொண்டனர்.

உண்டார்களோ இல்லையோ அதற்குள் அவர்களை வம்புக்கு இழுத்து வலையில் மாட்டிவைக்க மாமனும் துரியனும் பேச்சுத் தொடங்கினார்கள். சோறு சமைக்க ஆகும் காலத்துக்குள் பொழுது தக்க வகையில் போக்கத் தடையுண்டோ என்று சகுனி தொடங்கினான். மாமன் மருமகன் என்ற உறவு கொண்டு தருமனோடு வேடிக்கைப் பேச்சில் வேதனையைத் தொடங்கி வைத்தான்.

“சும்மா இருக்கிறாயே இந்தத் தாயத்தை உருட்டிக் கொண்டு இருக்கலாமே” என்றான். அறப்பள்ளியிலே பாடம் படித்த தருமன் அறநெறிச் சாரத்தை அடியோடு ஒப்புவித்தான். “சூதும் வாதும் வேதனை செய்யும்” என்று சொல்லிப் பார்த்தான்.

“நீ ஒன்றும் காசுவைக்க வேண்டாம்; உருட்டத்தான் சொல்கிறேனே தவிரத் தெருட்டச் சொல்லவில்லை. நான் தோற்றால் காசு தருகிறேன். நீ தோற்றால் கைவிரித்தால் போதும்” என்று கிண்டி விட்டான் சகுனி.

“பாவம்! வேள்வி செய்தனர். அதனால் பொருள் விரயம் ஆகிவிட்டு இருக்கும். இல்லாதவர்! அதனால் வைத்து ஆடக் காசு இருக்காது” என்றான் துரியன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/124&oldid=1036925" இலிருந்து மீள்விக்கப்பட்டது