பக்கம்:மாபாரதம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

123

மேலும் இழுத்தது. ஒரே ஆட்டத்தில் இழந்தவை அனைத்தையும் திரும்பப்பெறலாம் என்பதால் பந்தயத் தொகை அதிகரித்தது. ஈட்டி வைத்த செல்வம், நாட்டி வைத்த புகழ் அத்துணையையும் ஒரு சில உருட்டல்களில் இழந்து விட்டான்.

“வைப்பதற்கு ஒன்றும் இல்லையா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்; எஞ்சியிருந்த தம்பியர் நால் வரையும் வைத்து இழந்தான். தன்னையும் வைத்து ஆடினான். அரைக்கணத்தில் ஐவரும் அடிமையாயினர்.

“இன்னும் உன் மனைவி” என்று இழுத்தான்.

வீடுமன் தடுத்தான்; விதுரன் கடுமையான சொற்களைத் தொடுத்தான்; விசயன் வில்லை எடுத்தான்; வீமன் கதையை மடுத்தான்; தம்பியர் விழிகள் கடுத்தனர்.

“பொறு” என்று அவர்களுக்குக் குறிப்புக் காட்டினான் தருமன்.

பெண்ணைப் பணயம் வைத்தான்; ஆட்டத்தில் அறிவுக்கண்ணை இழந்தான்.

கட்டிய மனைவியைச் சதுரப்பலகையின் கட்டுக்குக் கொண்டு வந்து நிறுத்தினான்.

ஆட்டம் முடிந்து; ஆர்ப்பாட்டம் எழுந்தது.

ஆரணங்கினைக் கொணர்க என்றான். தேரோட்டியை அனுப்பினான். அடிமைக்கு மேலாடை ஏன் என்று ஆரவாரம் செய்தான். எப்பொழுதும் உடுத்துக் களையாத உத்தரியத்தை எடுத்துக் கீழே போட வைத்தான். அவர்கள் வீரம் உடல் தழும்புகளில் அடங்கி மவுனம் சாதித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/126&oldid=1036927" இலிருந்து மீள்விக்கப்பட்டது