பக்கம்:மாபாரதம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

மாபாரதம்


தேர் ஒட்டி பிராதிகாமி நேர் ஒட்டமாக ஓடினான். சிந்தித்துப் பார்த்தான்; அவன் சிந்தையில் சட்ட நுணுக் கங்கள் சதிர் ஆடின; திரும்பி வந்தான்.

“தருமன் தன்னைத் தோற்குமுன் பெண்ணை வைத்து விளையாடினானா? கண்ணை இழந்தபின் சித்திரம் வரைந்தானா?” என்று திரெளபதி வினா எழுப்பியதாக அவனே ஒரு கற்பனையை அவிழ்த்துவிட்டான்.

“அவளை அழைத்துவா! அரங்கில் அவள் கணவன் விடை சொல்வான்” என்று கடுத்துப்பேசிச் துச்சாதனன் முகத்தை வெகுண்டு நோக்கினான்.

“கற்கண்டு போலப் பேசும் அவள் சொற் கண்டு நீ திகைக்காதே; குவளை விழியாளைத் ‘திரு ருதி’ என்று இழுத்து வந்து இங்கே ‘இரு இரு’ என்று கொண்டு வந்து நிறுத்து” என்று கட்டளையிட்டான்.

“ஐவருக்கு ஒருத்தி; அவள் அஞ்சாத சிறுக்கி; அவளை அழைத்துவா; பேசலாம் இங்கே நிறுத்தி” என்றான்.

அதிருஷ்டம் துச்சனை அனைத்தது. நேரே திரெளபதி இருந்த காந்தாரியின் இல்லத்துக்குச் சென்றான்.

“வாடி இங்கே, வடிவுக்கு அரசி நீ; அங்கே உன் கணவர்கள் வாடி இருப்பதை நேரடிவந்து பார்” என்று கூறி அவள் கரங்களைத் தொட்டிழுக்க அருகில் சென்றான்.

“அத்தை; இந்தச் சொத்தை செய்யும் வித்தையைப் பார்! அவன் கைப்பிடித்து இழுக்கிறான்; நீ கண் கட்டிக் கொண்டு மறைகிறாய். அடைக்கலம் அளிக்க வேண்டிய நீ அவனுக்குப் படைக்கலமாகத் துணை செய்கிறாய்” என்று கதறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/127&oldid=1048190" இலிருந்து மீள்விக்கப்பட்டது