பக்கம்:மாபாரதம்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

மாபாரதம்

தோற்றத்தில் முருகனையும் ஒத்து இருந்தான். உருப்பசி என்ற நடனப்பெண் சோலை ஒன்றில் உலவிக் கொண்டிருந்தாள். அங்குத் திரிந்து கொண்டிருந்த அசுரர்கள் சிலர் அவளைத் தேரில் ஏற்றிக் கடத்திச் சென்றனர். அவள் அபயக்குரல் கேட்டு இம்மன்னன் புரூரவசு அவர்களைப் பின் தொடர்ந்து போரிட்டு அவளை மீட்டு வந்தான் இவன் வீர சாகசம் கண்டு அவனை மணக்க இசைந்தாள். அவர்கள் இல்வாழ்க்கையில் மகன் ஒருவன் பிறந்தான்; ஆயு என்பது அவன் பெயர்.

அவன் மகன் நகுடன்; வேள்வி நூறு செய்து இந்திரப் பதவியை அடைந்தான், சுந்தரியாகிய இந்திராணியை அவன் அடைய விரும்பினான். அவள் அவனை ஏற்க விரும்பவில்லை; தடுக்கவும் இயலவில்லை. வேறு வழியில்லாமல் பல்லக்கு ஒன்று அனுப்பி வைத்தாள்; ரிஷிகள் எழுவர் அவனைச் சுமந்து சென்றனர், அதன் மேலே எறியதும் சர்ப்ப சர்ப்ப என்றான். மிக விரைவில் செல்க என்பது அச்சொல்லின் பொருள் ஆகும். சர்ப்பம் ஆகுக என்று அதைத் திருத்தி அவர்களுள் அகத்திய முனிவர் சபித்தார். பதவி இழந்து பரிதாபத்துக்கு உரியவன் ஆனான். அவன் மகன் யயாதி என்பவன் அவனுக்குப்பின் அரசனானான்.

யயாதி என்பவன் காதல் வியாதியால் தவறு செய்தான். இவன் விற்கலையில் விறலோன் ஆக இருந்தான். வெற்றித் திருமகள் அவன் தோள்களில் வந்து குடிகொண்டாள். புகழும் பெருமையும் பெற்ற இவன் சுக்கிரனின் மகள் தேவானையைத் திருமணம் செய்து கொண்டான். இரு புதல்வர்களைப் பெற்றான். அவர்கள் இருவரும் தறுதலைகளாக மாறினர். களர் நிலத்தில் பூத்த காளான்கள் ஆயினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/13&oldid=1239389" இலிருந்து மீள்விக்கப்பட்டது