பக்கம்:மாபாரதம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

135

சென்றான். மலையடிவாரத்தில் நிலையான இருப்பைத் தேடிக்கொண்டான்; உணவும் உறக்கமும் மறந்தான்; இலைச்சருகுகளைப் புசித்தான்; காற்று அவன் உயிரை இயக்கியது; வெய்யில், மழை என்ற பேதத்தை அவன் அறிந்ததில்லை. கோரமான தவம் செய்த நிலையைக் கண்டு பார்வதி மனம் இரங்கிப் பரமசிவனிடம் எடுத்து உரைத்தாள். மற்றும் பன்றி ஒன்று அவனைக் கொன்று தின்னச் செல்வதையும் சுட்டிக் காட்டினாள்.

அன்னை பார்வதி நீலகண்டனாகிய நிமலனிடம் இவன் தவத்தைப்பற்றி எடுத்துப் பேசினாள். புன்முறுவல் பூத்து அனைத்தும் அறிந்த ஈசன் அவனைக் காப்பது தம் கடமை என்று பேசிச் செயல்பட்டான்.

வேடுவனும் வேடுவச்சியுமாக இருவரும் உருமாறி மேடுபள்ளம் நிறைந்த அந்த மலைக்காடுகள் நோக்கிச் சென்றனர்.

அந்தப் பன்றி மூகன் என்ற பெயர் உடைய அசுரன் ஆவான். துரியனால் ஏவப்பட்டவன்; அருச்சுனனைத் தன் கொம்பால் முட்டி வயிற்றைக் கிழித்து அவன் ஏட்டை முடிக்கவிரும்பியது. அருச்சுனனும் கண் விழித்தான்; பன்றி வருவதைக் கண்டான்; சிவனும் தன் வில்லை எடுத் தான்; இருவர் அம்புகளும் ஒரே சமயத்தில் பாய்ந்தன. பன்றி அலறி விழுந்து உருண்டு உயிர் விட்டது.

“நீ யார்? அதை ஏன் கொலை செய்தாய்?” என்று விசயன் வினவினான்.

“வேடுவன் யான்; வேட்டை என் தொழில்” என்றான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/138&oldid=1037275" இலிருந்து மீள்விக்கப்பட்டது