பக்கம்:மாபாரதம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

மாபாரதம்

தால் கிடைக்கும் சுவை மிக்க வாழ்க்கைக்கு ஈடு இல்லை என்பதை உணர்ந்தான். மேலும் கடமைகள் காத்துக் கிடந்தன. சென்றவன் என்ன ஆனான் என்று தன்னை அலைத்துக் கொன்று அழிக்கும் கவலையில் தன் தமையன் அவதியுறுவானே என்று கவலைப்பட்டான். அவன் வரு கையை உரோமசனன் என்னும் முனிவன்வழிச் செய்தி சொல்லி அனுப்பினான். அவன் வேகமாகச் செல்லும் திறன் படைத்தவன்.

அவன் முன் சென்று அருச்சுனன் வருகையை அறிவித்தான்.

வீமனின் பாத யாத்திரை

தீர்த்த யாத்திரை சென்ற அருச்சுனன் குமரி ஆடிவந்தவன் வழியில் குமரிகளையும் நாடி அவர்களை மணந்து ஆளுக்கு ஒரு பிள்ளை என ஆளாக்கிவிட்டுத் திரும்பி வந்தான். மீண்டும் புனித யாத்திரை ஒன்று மேற்கொண்டு கயிலைக்குச் சென்று பாசுபத அத்திரம் பெற்று வந்தான். அதேபோல வீமனும் திரெளபதி கேட்ட பூவினைக் கொண்டுவர வடநாடு நோக்கிப் பாதயாத்திரை செய்தான்; வடநாட்டில்தான் குபேரனின் அளகை நகர் இருந்தது. அதுவரை அவன் சென்று வந்தான்.

பொய்கைக் கரையில் தாமரைப் பூவின் பொலிவில் ஈடுபடுத்திக் கொண்டு தன்னை மறந்த நிலையில் திரெளபதி நின்று கொண்டிருந்தாள். விண்ணுலகினின்று சரிந்து தன் கண்ணெதிரே ஒரு பொன் தாமரைப்பூ அவள் கரத்தில் வந்து விழுந்தது. அதன் தரத்தைக் கண்டு வியந்தாள். பூ என்றாலே பூவையர்க்குப் பிடிக்கும்; அதனோடு அது பொற்பூ என்றதும் சொல்லவும் வேண்டுமா?

அந்தக் காட்டிலே அவள் பட்டுப் புடவையையா வாங்கித்தரச் சொல்ல முடியும். பட்டுப்போகும் பூவைத் தான் கேட்க முடியும். வீமன் எதிர்ப்பட்டான். அவள் ஏவலுக்குக் காவலாக நின்று ஆவலோடு எதிர்பார்த்து வீமன், என்ன வேண்டும்”? என்று கேட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/143&oldid=1037350" இலிருந்து மீள்விக்கப்பட்டது