பக்கம்:மாபாரதம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

மாபாரதம்

துகிலைப் பற்றினான்; மற்றோர் துகில் உரியும் நாடகம் தொடர்ந்தது. அரச அவையில் இருந்தவர் நெட்டை மரங்களாக அவனைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர்.

அவள் சமையல் அறை நோக்கி ஓடினாள்; அங்கு வீமன் பச்சையாக இருந்த கட்டை ஒன்றை எடுத்து அவன் மண்டையைப் பிளக்க ஓங்கினான். தூர இருந்த தருமன் “பச்சைக் கட்டை எரியாது” என்றான். அவன் குறிப்பு அறிந்து அடங்கி விட்டான். அது தக்க சமயம் அன்று என்பது அவன் கூறிய குறிப்பாக இருந்தது.

அண்ணன் மீது கோபம்; அன்றும் தடுத்தான்; இன்றும் தடுக்கிறான் என்று வெறுத்தான்; நிதானமாகத் திரெளபதி சொன்னாள். அவசரப்பட்டால் கொட்டிக் கவிழ்த்த பாலாகி விடுவோம்; ஆத்திரம் அறிவு அழிக்கும்; பொறுத்தவர் பூமி ஆள்வார். வீணே வெளிப்பட்டு விடுவோம். துரியன் மறுபடியும் நம்மைக் காட்டுக்கு அனுப்பி விடுவான். அதனால் புத்திசாலித்தனமாக அவனை முடிக்க வேண்டும்” என்றாள்.

“அவனை மயக்கிக் காதல் உரைகள் பேசி அழைக்கிறேன். நள்ளிரவில் அவன் பாழ்மண்டபத்துக்கு வருவான்; நீ அவனை அங்குப் பார்த்துக் கொள்ளலாம்; மறு நாள் வண்ணமகளின் காதலன் கந்தருவன் வந்து அவனைத் தேர் ஏற்றிக் கொன்றுவிட்டான் என்ற செய்தி பரவும்; நாமும் இங்கு நிம்மதியாக எஞ்சிய நாட்களைக் கழிக்க முடியும்” என்று கூறினாள். இருவரும் தனியே சந்தித்து இத்திட்டத்தைத் தீட்டினர்.

மறுநாள் கீசகன் வந்தான். அவனிடத்தில் அஞ்சுகம் போன்ற திரெளபதி நெஞ்சங் குழையப் பேசினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/159&oldid=1048211" இலிருந்து மீள்விக்கப்பட்டது