பக்கம்:மாபாரதம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

மாபாரதம்

அறிவு இருக்கிறதா என்று வெளிப்படையாகக் கேட்காமல் ஒண்மை அற்றவன் என்று அவனைச் சாடினான்.

இருவரையும் அமைதிப்படுத்திக் கண்ணன் வழிகள் இரண்டே உள்ளன என்று விளக்கிக் கூறினான். சூது உதவாது என்றால் மோதல் தான் உண்டு என்று ஒதினான். நாட்டைக் கேட்டால் அவன் திருப்பித்தர என்ன வழியை நாடுகிறான் என்று கேட்டுவரத் தக்க ஆள் அனுப்ப வேண்டும் என்றான்.

பஞ்சாங்கம் பார்த்துவரும் புரோகிதன் ஒருவன்; உலூகன் என்பது அவன் பெயர் ஆகும்.

அவன் அக்காலச் செஞ்சிலுவைச்சங்கம் சார்ந்தவன்; அவனுக்கு யாரும் ஊறு செய்யமாட்டார்கள். உறவுகள் துறந்த ஞானி என்பதால் உண்மையை எடுத்து உரைப்பான் என்று கண்ணன் கூறினான்.

உலூகன் தூது அனுப்பப்பட்டான்; முனிவன் ஆதலின் இனிதாக வரவேற்கப்பட்டான்.

“நாடு கொடுக்க நயமான உரை நல்குக” என்று துரியனைக் கேட்டான்.

“மேலும் விசயனும் வீமனும் வீரம் மிக்கவர்கள். அதனால் யோசித்துக் கூறுங்கள்” என்றான்.

“வீரம் மிக்கவன் விசயன்” என்ற சொல்லைக்கேட்கக் கன்னனின் பொறுமை இடம் கொடுக்கவில்லை.

“போரில் சந்திப்போம்” என்று துரியன் செய்தி சொல்லி அனுப்பக் கன்னன் காரணன் ஆயினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/165&oldid=1048216" இலிருந்து மீள்விக்கப்பட்டது