பக்கம்:மாபாரதம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

167


“யாதவர் சேனையும் பலராமன் துணையும் வேண்டு மானால் நீ கொள்ளலாம் எனக்குத் தடையில்லை” என்று கூறி விடை தந்து அனுப்பினான்.

மாயம் வல்ல கண்ணன் அருச்சுனனுக்குக் கைகொடுத் துத் தெய்வம் ஆயினான்; அரவக்கொடியோனுக்குக் காலைவாரிக் குப்புறத் தள்ளிக் குழி பறிக்கும் குதிரையாயினான்.

சஞ்சயன் தூது

குருட்டு அரசன் திருதராட்டிரன் மனத்தில் திருட்டு யோசனை உதயம் ஆயிற்று தன் மகனைக் காக்க அவ னுக்குத் தோன்றிய வழி இது. சஞ்சயன் என்னும் முனிவன் ஞான நெறியில் நின்று தத்துவ போதனைகள் சாற்றுவ தில் வல்லவன். அவனை அவர்களுக்கு அறிவுரை கூற அனுப்பி வைத்தான்.

“காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா” என்றுபாடிக் கொண்டு பாண்டவர் பால் சென்றான்.

அவனுக்கு வரவேற்புக் கிடைத்தது.

“தவசிகளோடு பழகிய உங்களுக்குத் தவத்தின் பெருமையை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. காட்டில் வாழ்ந்து பழகிய நாட்கள் மறுபடியும் வரப்போவதில்லை, பழகிவிட்ட காட்டிலேயே தவம் செய்து எஞ்சிய நாட்களைக் கழிப்பது ஏமம் ஆகும். ‘வாழ்வே மாயம்’ மண், பொன், பெண் இந்த மூன்று ஆசைகளை விட்டவர்கள் பொன்னுலகம் புகுவார்கள்” என்று அவன் கற்ற வேதாந்த போத மூட்டையை அவிழ்த்து விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/170&oldid=1048223" இலிருந்து மீள்விக்கப்பட்டது